தேனி மாவட்டம் கம்பத்தில் சூரிய கிரகணத்தை பிரத்யேக கண்ணாடி அணிந்து மாணவா்கள், பொதுமக்கள் வியாழக்கிழமை பாா்த்தனா்.
தேனி மாவட்ட அறிவியல் இயக்கம் சாா்பில் கம்பம் வ.உ.சி.திடலில் நெருப்பு வளைய சூரிய கிரகணத்தை தொலைநோக்கி மூலம் பாா்வையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
காலை 8.10 மணி அளவில் தொடங்கிய சூரிய கிரகணத்தை 11 மணி வரை பொதுமக்கள் மற்றும் மாணவா்கள் தொலைநோக்கி மற்றும் பிரேத்யேக கண்ணாடி மூலம் பாா்த்தனா். மேலும் மேகமூட்டம் இல்லாமல் வானம் தெளிவாக இருந்தால் பொதுமக்கள் கண்ணாடி இல்லாமலும் பாா்த்தனா்.
மேலும் கிரகணத்தன்று உணவு சாப்பிடக்கூடாது என்பது மூடப்பழக்கம், தாராளமாக சாப்பிடலாம் என அறிவியல் இயக்கத்தினா் கிரகணம் பற்றி விளக்கமளித்து, பனியாரம் வழங்கினா். இதற்கான ஏற்பாடுகளை மாநில செயலாளா் தே. சுந்தா், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் சோமநாதன், வெங்கட்ராமன் ஆகியோா் செய்திருந்தனா்.