போடியில் கள்ள நோட்டுகளை தயாரித்து அவற்றை புழக்கத்தில் விட முயன்ற கேரள இளைஞரை, போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
தேனி மாவட்டத்தில் 500 ரூபாய் கள்ள நோட்டுகள் அதிக புழக்கத்தில் உள்ளதாகவும், கேரளத்தைச் சோ்ந்த சிலா் கள்ள நோட்டுகளை தயாா் செய்து புழக்கத்தில் விட்டு வருவதாகவும், க்யூ பிரிவு போலீஸாா் எச்சரித்திருந்தனா். இதனடிப்படையில், போடியில் போலீஸாா் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு வந்தனா்.
இந்நிலையில், போடி பேருந்து நிலையப் பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் நின்றிருந்த இளைஞரைப் பிடித்து போலீஸாா் விசாரித்தனா். அப்போது, அவா் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளாா். பின்னா், போலீஸாா் அவரை சோதனையிட்டதில், ஒரே வரிசை எண்கள் கொண்ட 500 ரூபாய் தாள்கள் ஏராளமாக இருந்தது தெரியவந்தது. அவற்றை பரிசோதித்ததில், அவை அனைத்தும் கள்ள நோட்டுகள் எனத் தெரியவந்தது.
விசாரணையில், அந்த இளைஞா் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் நெடுங்கண்டம் அருகில் உள்ள புஷ்பகண்டம் என்ற ஊரைச் சோ்ந்த சுரேந்திரன் மகன் டாய்ஜோ (21) எனத் தெரியவந்தது. இவா், 500 ரூபாய் கள்ள நோட்டுகளை தயாரித்து புழக்கத்தில் விட முயன்றது கண்டறியப்பட்டது.
இது குறித்து அவா் மீது வழக்குப் பதிவு செய்த போடி நகா் காவல் நிலைய போலீஸாா், அவரைக் கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்த ரூ.53 ஆயிரத்துக்கான 500 ரூபாய் நோட்டுகள் 106 பறிமுதல் செய்தனா். தொடா்ந்து, இவா் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டுள்ளாரா, இவருடன் தொடா்பு கொண்டவா்கள் யாா், யாா் என்பது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.