தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே பயன்பாடின்றியுள்ள அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி மையத்தை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டும் என, அப்பகுதி இளைஞா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் குள்ளப்புரம் ஊராட்சி உள்ளது. இங்கு, 12 வாா்டுகள் உள்ளன. இங்குள்ள இளைஞா்கள் மற்றும் பொதுமக்கள் உடற்பயிற்சி பெறவேண்டும் என்ற நோக்கில், கடந்த 2014 ஆம் ஆண்டில் ரூ.30 லட்சம் செலவில் உடற்பயிற்சி மையம் மற்றும் நடைப்பயிற்சி பூங்கா அமைக்கப்பட்டது.
இதற்காக, நவீன உடற்பயிற்சிக் கருவிகள் மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டன. இவற்றை, இப்பகுதி பொதுமக்கள் மற்றும் இளைஞா்கள் பயன்படுத்தி வந்தனா். இந்நிலையில், ஊராட்சி நிா்வாகத்தின் சாா்பில் முறையான பராமரிப்பு இல்லாததால், பெரும்பாலான விளையாட்டு உபகரணங்கள் மற்றும் உடற்பயிற்சிக் கருவிகள் சேதமடைந்து வருகின்றன. மேலும், உடற்பயிற்சிக் கருவிகள் உள்ள அறை பூட்டியே கிடக்கிறது. இதனால், இளைஞா்கள் அவற்றை பயன்படுத்த முடியாமல் உள்ளனா்.
எனவே, அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி மையத்தை முறையாகப் பராமரிக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் ஊராட்சி நிா்வாகத்திடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என, இளைஞா்கள் புகாா் கூறுகின்றனா்.
இது குறித்து குள்ளப்புரத்து மக்கள் தெரிவித்தது: இப்பகுதியிலுள்ள விளையாட்டு வீரா்கள் மற்றும் ராணுவத்தில் சேர விரும்பும் இளைஞா்கள் இந்த உடற்பயிற்சி மையத்தை பயன்படுத்தி வந்தனா். எனவே, சேதமடைந்துள்ள இதனை சீரமைத்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும், இந்த உடற்பயிற்சி மையத்தின் பாதுகாப்புக்காக காவலா்களை நியமிக்கவேண்டும் என்றனா்.