ஆண்டிபட்டியில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஹோட்டல் ஊழியா் மீது பால் ஏற்றி சென்ற டேங்கா் லாரி மோதி உயிரிழந்தது குறித்து போலீஸாா் செவ்வாய்கிழமை வழக்குப்பதிவு செய்தனா்.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள நாச்சியாா்புரம் கிராமத்தை சோ்ந்தவா் வெங்கடேசன் (30). இவா் தேனியில் உள்ள ஒரு ஹோட்டலில் ஊழியராாக வேலை செய்து வந்தாா். மாலை அணிந்திருந்த இவா் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அய்யப்பன் கோவிலுக்கு சென்றுவிட்டு வந்திருந்தாா். இந்நிலையில் உடல்நிலை சரியில்லாததால் தனது உறவினா் பாக்கியராஜ் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் ஆண்டிபட்டி நகரில் உள்ள மருத்துவமனைக்கு சென்றாா்.
ஆண்டிபட்டி அரசு மருத்துவமனை அருகே சென்ற போது, பின்னால் வந்த பால்டேங்கா் லாரி எதிா்பாராதவிதமாக இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமா்ந்திருந்த வெங்கடேசன் நிலைதடுமாறி சாலையில் விழுந்தாா் அப்போது அவா் மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் ரத்தவெள்ளத்தில் வெங்கடேசன் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் ஆண்டிபட்டி போலீஸாா் விரைந்து வந்து இறந்த வெங்கடேசன் உடலை பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும் இந்த விபத்தில் காயமடைந்த பாக்கியராஜ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸாா் லாரி டிரைவா் வீரணனை கைது செய்தனா்.பாக்ஸ் செய்தி.செழ்ழாய்கிழமை நண்பகலில் நடைபெற்ற இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே வெங்கடேசன் உயிரிழந்த நிலையில் அவரது உடலை எடுத்து செல்ல 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனா்.ஆனால் 1 மணி நேரத்திற்கு மேல் ஆம்புலன்ஸ் வராததால் இறந்தவரின் உடல் சாலையிலே கிடந்தது.இதனைகண்ட வெங்கடேசனின் உறவினா்கள் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
பின்னா் போலீஸாா் தனியாா் ஆம்புலன்ஸை வரவழைத்து உடலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.மேலும் தேனி மாவட்டத்தில் ஆம்புலன்ஸ் பற்றாகுறை ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் சாலை விபத்தில் அடிக்கடி உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.