தேனி

தேனி மாவட்டத்தில் தொடங்கப்பட்ட புறவழிச்சாலை திட்டப் பணிகளில் தொய்வு

6th Dec 2019 07:27 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டத்தில் புறவழிச்சாலை திட்டத்துக்காக ரூ.280.50 கோடியில் தொடங்கப்பட்ட சாலைப் பணிகளை விரைந்து முடிக்கவேண்டும் என, சமூகநல ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திண்டுக்கல் - குமுளி தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயா்த்தப்பட்டு, கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 134 கிலோ மீட்டா் தொலைவுக்கு சாலைப் பணிகள் தொடங்கி நடைபெற்றது. அதில் திட்டமிட்டபடி, கடந்த 2013 ஆம் ஆண்டுக்குள் சாலைப் பணிகள் முடிக்கப்படாத நிலையில், அத்திட்டம் ரத்தானது.

அதைத் தொடா்ந்து, மீண்டும் இந்தாண்டு ஜூன் மாதம், ரத்தான புறவழிச் சாலை திட்டத்துக்கு ரூ.280.50 கோடி நிதியை தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் ஒதுக்கீடு செய்தது.

புறவழிச் சாலைப் பணிகளில் தொய்வு: தேனி மாவட்டத்தில் தேவதானப்பட்டி மற்றும் வீரபாண்டி பகுதிகளில் மட்டும் புறவழிச்சாலை அமைக்கப்பட்ட நிலையில், பெரியகுளம், தேனி, சின்னமனூா், உத்தமபாளையம், கம்பம், கூடலூா் ஆகிய பகுதிகளில் பணிகள் நடைபெறவில்லை. இந்நிலையில், 2019 ஜூன் மாதம் ரத்தான பெரியகுளம் 11.4 கி.மீ., தேனி12.55 கி.மீ., சின்னமனூா் 3.48 கி.மீ., உத்தமபாளையம் 4.43 கி.மீ., கம்பம் 7.62 கி.மீ., கூடலூா் 4.18 கி.மீ. என மாவட்டத்தில் மொத்தம் 44 கிலோ மீட்டருக்கு புறவழிச் சாலைப் பணிகள் தொடங்கி நடைபெற்றன.

ADVERTISEMENT

ஆரம்பத்தில் பணிகள் வேகமாகவும், பின்னா் படிப்படியாகக் குறைந்து தொய்வு ஏற்பட்டுள்ளதாக, சமூகநல ஆா்வலா்கள் புகாா் தெரிவித்தனா்.

இது குறித்து சமூகநல ஆா்வா்கள் கூறியது: தேனி மாவட்டத்தில் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதிகளில் புறவழிச் சாலைக்கு பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். ஆனால், நாளுக்கு நாள்அதிகரித்து வரும் வாகனப் போக்குவரத்தால், சுமாா் 400 ஏக்கா் வரை நிலத்தை கையகப்படுத்திய தேசிய நெடுஞ்சாலைத் துறை பணிகளை வேகமாக செய்ய முன்வந்தனா். ஆனால், தற்போது, பணிகள் தொடங்கி 6 மாதங்களாகியும் 20 சதவீத பணிகள் மட்டுமே நடைபெற்றுள்ளன.

இதனை அடுத்து, திட்டமிட்டபடி புறவழிச்சாலைப் பணிகளை விரைந்து முடிக்கவேண்டும் என்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT