தேனி

தேனியில் மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியம் தொடக்கம்: விரைவில் புதிய நிர்வாகிகள் நியமனம்

30th Aug 2019 08:25 AM

ADVERTISEMENT

தேனியை தலைமையிடமாகக் கொண்டு அரசு உத்தரவின்படி கடந்த ஆக.22-ல் புதிதாக தொடங்கப்பட்டுள்ள மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியத்துக்கு (ஆவின்), விரைவில் நிர்வாகக் குழு உறுப்பினர்கள், தலைவர் மற்றும் துணைத் தலைவர் நியமிக்கப்பட உள்ளனர்.
தேனி பால் குளிரூட்டும் நிலையத்துக்கு தற்போது மாவட்டத்தில் 480 பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் மூலம் பால் அனுப்பப்படுகிறது. இதில், க.மயிலை ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் இருந்து மட்டும் தினமும் சராசரி 60 ஆயிரம் லிட்டர் பால் அனுப்பப்பட்டு வருகிறது. தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியம் மூலம் பணம் பட்டுவாடா செய்யப்படும். மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியத்தில் தேனி மாவட்டத்தில் இருந்து,  மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியத்தின் தற்போதைய தலைவர் ஓ.ராஜா உள்ளிட்ட 6 பேர் நிர்வாகக் குழு உறுப்பினர்களாக உள்ளனர்.
புதிய ஒன்றியம் உதயம்: இந்நிலையில், அரசு உத்தரவின்படி தேனியை தலைமையிடமாகக் கொண்டு, புதிதாக தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியம் கடந்த ஆக.22-ஆம் தேதி தொடக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியத்தில் தேனி மாவட்டம் சார்பாக நியமிக்கப்பட்டுள்ள ஓ.ராஜா, செல்லமுத்து, இளையராஜா, சாமித்தாய், பிரீத்தா, சரவணன் ஆகியோர் இதன் நிர்வாகக் குழு உறுப்பினர்களாக உள்ளனர்.
மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியத்துக்கு மேலும் 11 பேர் புதிய நிர்வாகக் குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு, தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்வு நடைபெறும். 
தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர் ஒன்றியம் மூலம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு பணப்பட்டுவாடா மற்றும் துரித சேவை வழங்கவும், மாவட்டத்தில் பால் உற்பத்தி மற்றும் ஆவின் பால் விற்பனையை அதிகரிக்கவும், பால் உப பொருள்கள் தயாரிப்பு மற்றும் விற்பனைக்கும் அரசு திட்டமிட்டுள்ளது என்று பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க அலுவலர்கள் கூறினர்.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT