தேனி மாவட்டம் லோயர்கேம்ப்- குமுளி மலைப்பாதையில் இரவு நேரங்களில் சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள், கூலி தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.
தமிழக- கேரள எல்லையை இணைப்பது லோயர்கேம்ப், குமுளி மலைப்பாதை. 6 கிலோ மீட்டர் தூரம் உள்ள இச்சாலையின் கிழக்கு புறம் மேகமலை வனச்சரணாலயத்திற்கும், மேல்புறம் கம்பம் மேற்கு வனச்சரகத்திற்குமான எல்லையாக உள்ளது. செவ்வாய்க்கிழமை லோயர்கேம்ப்பிலிருந்து, குமுளி சென்ற வாகன ஓட்டிகள், இரச்சல் பாலம் அருகில் சிறுத்தை நடமாடுவதை பார்த்துள்ளனர். அதே போல் குமுளியிலிருந்து, லோயர்கேம்ப் சென்ற ஆம்னி பேருந்துகளில் சென்றவர்கள் இதே பகுதியில் சிறுத்தை நடமாடுவதை பார்த்துள்ளனர். இதனால் கூடலூர், லோயர்கேம்ப்பிலிருந்து குமுளிக்கு, இரண்டு சக்கர வாகனங்களில் செல்லும், பால் வியாபாரிகள், கூலி வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டத்தை கேள்விப்பட்டு அச்சமடைந்துள்ளனர். எனவே வனச்சரணாலயத்தினர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.