ஆண்டிபட்டி அருகே புதன்கிழமை ஆட்டோ மீது தனியார் கல்லூரிப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் 8 பேர் பலத்த காயமடைந்தனர்.
ஆண்டிபட்டி அருகே சிலோன் காலனியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் (33). ஆட்டோ ஓட்டுநர். இவர் புதன்கிழமை காலை தேனியிலிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு க.விலக்கு பகுதிக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது குன்னூர் அருகே சென்று கெண்டிருந்தபோது பின்னால் வந்த தனியார் கல்லூரி பேருந்து ஆட்டோ மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதனால் ஆட்டோ சாலையோரம் கவிழ்ந்தது. மேலும் அதில் பயணம் செய்த சிலோன் காலனி ஐசக் (65), வயல்பட்டி ராஜம்மாள் (60), பொம்மையகவுண்டன்பட்டி தனலட்சுமி (35), தேனி அன்னக்கொடி (40), அரண்மனைப்புதூர் பாலமுருகன் (50), வீரபாண்டியைச் சேர்ந்த நல்லம்மாள் (57), வசந்தா (39) ஆகியோர் பலத்த காயமடைந்தனர். உடனடியாக காயமடைந்தவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த க.விலக்கு போலீஸார் தனியார் கல்லூரி பேருந்து ஓட்டுநரான சின்னமனூரைச் சேர்ந்த குப்பமுத்து (30) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.