தேனி

ஆண்டிபட்டி அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை ஆக. 30 இல் இறுதிக்கட்ட கலந்தாய்வு

28th Aug 2019 09:39 AM

ADVERTISEMENT

ஆண்டிபட்டி அரசு கலை மற்றும் அறிவியில் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான இறுதிக்கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட்  30 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இங்கு 2019-20  கல்வி ஆண்டின் மாணவர் சேர்க்கைக்கான முதல் கட்ட கலந்தாய்வு மே 29, 30 ஆம் தேதிகளில் நடைபெற்றது. முதல் கட்ட கலந்தாய்வில் பி.ஏ.,பொருளாதாரம், பி.எஸ்.சி.,கணிதம், பி.எஸ்.சி.,இயற்பியல் , பி.காம்.,(சி.ஏ.), ஆகிய பிரிவுகளில் மொத்தம் 200 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். கடந்த ஆண்டு வரை முதலாம் ஆண்டு மாணவர்கள் சேர்க்கை 340 ஆக இருந்து வந்த நிலையில் இந்த கல்வியாண்டு 200 ஆக குறைக்கப்பட்டதால் இப்பகுதியைச் சேர்ந்த கிராமப்புற மாணவர்கள் மேல் கல்வி பயில முடியாமல் மிகவும் சிரமத்துக்குள்ளாகினர். 
மேலும் மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும் என பெற்றோர்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து இக்கல்லூரியில் கூடுதலாக மாணவர்களை  சேர்க்க அரசு உத்தரவிட்டதையடுத்து ஜூலை 10-இல் 2 ஆம் கட்ட கலந்தாய்வும்,  மூன்றாம் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 7  ஆம் தேதியும்  நடைபெற்றது. 
இந்நிலையில் காலியாக உள்ள இடங்களுக்கான மாணவர் சேர்க்கைகான இறுதிக்கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 30  ஆம் தேதி நடைபெறவுள்ளதாக கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து கல்லூரி முதல்வர் வானதி கூறியதாவது: கல்லூரியில்  இனச்சுழற்சி அடிப்படையில் காலியாக உள்ள இடங்களுக்கு மாணவர் சேர்க்கைக்கான இறுதிக்கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 30 ஆம் தேதி காலை 10 மணிக்கு துவங்கும்.  பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 தேர்வில் கணிதம், இயற்பியல், பாடம் பயின்ற மாணவர்கள் பி.எஸ்.சி., (இயற்பியல்), (கணிதம்) சேர்க்கைக்கும், கணக்கு பதிவியல், வணிகவியல் பயின்ற மாணவர்கள் பி.காம்.,(சி.ஏ.), பொருளியல் பயின்ற மாணவர்கள் பி.ஏ.,(எக்கனாமிக்ஸ்) சேர்க்கைக்கும் கலந்தாய்வில் பங்கேற்கலாம். 
மதிப்பெண் தரம் மற்றும் காலியாக உள்ள இனச்சுழற்சி இடங்களுக்கு தகுதியின் அடிப்படையில் சேர்க்கை வழங்கப்படும். மாணவர்கள் மேற்கண்ட தகுதி மற்றும் அசல் சான்றுகளுடன் கலந்தாய்வுக்கு வர வேண்டும் என்று தெரிவித்தார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT