வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவத்தை கண்டித்து திங்கள்கிழமை தேனியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தேனி, நேரு சிலை அருகே நடைபெற்ற இப்போராட்டத்துக்கு அக்கட்சியின் தேனி கிழக்கு மாவட்டச் செயலர் ப.நாகரத்தினம் தலைமை வகித்தார்.
இதில், நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவத்தை கண்டித்து, சிலையை சேதப்படுத்தியவர்களை உடனடியாக கைது செய்ய காவல் துறையை வலியுறுத்தினர்.
தேனி மேற்கு மாவட்டச் செயலர் சுருளி, தேனி மக்களவை தொகுதிச் செயலர் இரா.தமிழ்வாணன், ஆதி தமிழர் கட்சி மாவட்டச் செயலர் காமராஜ், செங்கதிர் இயக்கத் தலைவர் முத்துக்குமார், வனவேங்கை கட்சி மாவட்டச் செயலர் சக்தீஸ்வரன் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கலந்து கொண்டனர்.சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் தேனி காவல் நிலைய போலீஸார் பேச்சு வார்த்தை நடத்தினர். இதையடுத்து போராட்டம் நடத்தியவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். சாலை மறியல் போராட்டத்தால் தேனி, நேரு சிலை நெடுஞ்சாலை மும்முனை சந்திப்பில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நிலக்கோட்டை: திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநிலச் செயலாளர் உலக நம்பி தலைமையில், அக்கட்சியினர் சாலை மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஒன்றியப் பொருளாளர் திராவிடன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இவர்களை நிலக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் பாலகுமாரன், வத்தலக்குண்டு காவல் ஆய்வாளர் பிச்சைபாண்டியன் ஆகியோர் தலைமையில் சென்ற காவல் துறையினர் கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில், வத்தலகுண்டு, பழனி மற்றும் திண்டுக்கல் ஆகிய இடங்களிலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அக்கட்சியின் திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைவர் ஜான் கிறிஸ்டோபர் உள்பட 75 பேரை போலீஸார் கைது செய்தனர்.