தேனி மாவட்டம் போடியில் வீட்டு பராமரிப்புக்காக வைக்கப்பட்டிருந்த, நிலைப்படி விழுந்ததில் காயமடைந்த சிறுமி சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தார்.
போடி அருகே சிலமலை தெற்கு தெருவை சேர்ந்தவர் சிவக்குமார் (35). இவரது மகள் ஹர்ஷினி (5) வெள்ளிக்கிழமை தனது வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்தார். அவரது வீட்டருகே சசிக்குமார் என்பவர் வீடு மராமத்துப் பணிகள் செய்து வருகிறார். இதற்காக வீட்டு நிலைப்படியை தனியே எடுத்து சுவரில் சாய்த்து வைத்திருந்தார்.
இந்நிலையில் அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த ஹர்ஷினியின் தலையில் நிலைப்படி விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த சிறுமி தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதனைத்தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி சனிக்கிழமை இறந்தார். இதுகுறித்து சிவக்குமார் அளித்தப் புகாரின் பேரில் போடி தாலுகா காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.