தேனி மாவட்டம் கூடலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் மரங்களை வெட்டியதாக பொதுமக்கள் மாவட்ட ஆட்சியருக்கு புகார் அனுப்பியுள்ளனர்.
கூடலூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பல ஆண்டுகளாக சந்தனம், தேக்கு , வாகை, புங்கை என பல வகையான மரங்கள் உள்ளன. இங்கு மின்சார கம்பி செல்வதற்கும், நோயாளிகள் மற்றும் பார்வையாளர்களுக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை வெட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதனைத்தொடர்ந்து அரசு மருத்துவமனை அதிகாரிகள், வனத்துறை மற்றும் பொதுப்பணித்துறையிடம் இடையூறு தரும், மரக்கிளைகளை வெட்ட அனுமதி வாங்கி உள்ளதாகத் தெரிகிறது. சனிக்கிழமை தனியார், அனுமதி வாங்கிய மரக்கிளைகளை வெட்டும் போது, அதன் அருகே இருந்த விலை உயர்ந்த மரங்களையும் சேர்த்து வெட்டியுள்ளனர். இதுகுறித்து சுகாதார நிலையத்துக்கு வந்த பொதுமக்கள் கேட்ட போது, அனுமதி வாங்கி வெட்டுவதாக தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக நிலைய மருத்துவ அலுவலரிடம் கேட்ட போது, இடையூறு தரும் மரக்கிளைகளை மட்டும் வெட்டியுள்ளோம் என்றார்.
இது குறித்து தங்கராஜா என்பவர் கூறியது: சுகாதார நிலையத்தில் அனுமதி பெறாத மரங்களை வெட்டியது தொடர்பாக தேனி மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்த வேண்டும் என்றார்.