தேனி

தேனி மாவட்டத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்: 54 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

16th Aug 2019 07:04 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 73 ஆவது சுதந்திர தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. 
தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில், மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆட்சியர் ம. பல்லவி பல்தேவ் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, சமாதானத்தின் சின்னமான வெள்ளைப் புறாக்களை பறக்கவிட்டார். பின்னர், 54 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 
தொடர்ந்து, காவல் துறை, தேனி என்.எஸ்.மேல்நிலைப் பள்ளி ஜூனியர் ரெட் கிராஸ், தேசிய மாணவர் படை, சாரணர் படை மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வீ. பாஸ்கரன் உடனிருந்தார்.
 விழாவில், சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கு கதராடை அணிவித்து கௌரவித்த ஆட்சியர், மாவட்ட அரசுத் துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 99 அலுவலர்கள், காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய 20 காவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
தேனி அபிநயா பரதநாட்டியப் பள்ளி, பூதிப்புரம் அரசு மேல்நிலைப் பள்ளி, ராயப்பன்பட்டி புனித ஆக்னஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, லட்சுமிபுரம் ஸ்ரீரேணுகா வித்யலயா மெட்ரிக். பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள், தேனி மாவட்ட விளையாட்டு அலுவலகம் சார்பில் யோகா, சிலம்பம், கராத்தே மற்றும் ஜூடோ உள்ளிட்ட விளையாட்டுகள் நடைபெற்றன.
இந்த விழாவில், மேகமலை வன உயிரினக் காப்பாளர் போஸ்லே சச்சின் துக்காராம், மாவட்ட வருவாய் அலுவலர் ச.கந்தசாமி, ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் திலவதி, துணை ஆட்சியர் வைத்தியநாதன், பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் ஜெயப்பிரித்தா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரேணுகாதேவி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
சமபந்தி விருந்து: சுதந்திர தின விழாவை முன்னிட்டு, வீரபாண்டியில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் சமபந்தி விருந்து நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர். 
கிராம சபை கூட்டம்: தேனி மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் ஊராட்சி செயலர்கள் தலைமையில், வியாழக்கிழமை கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. போடி ஊராட்சி ஒன்றியம் கோடாங்கிபட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில், ஆட்சியர் ம. பல்லவி பல்தேவ், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வீ. பாஸ்கரன், ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் திலவதி, ஊராட்சிகள் உதவி இயக்குநர் முருகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
போடி: ஒருங்கிணந்த  நீதிமன்ற வளாகத்தில் 73 ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. குற்றவியல் நீதித்துறை நடுவர் பாரதிராஜா தேசியக் கொடியை ஏற்றிவைத்தார்.
போடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் மணிமாறன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். போடி டி.எஸ்.பி. அலுவலகத்தில் டி.எஸ்.பி. 
ஈஸ்வரன் தேசியக் கொடியேற்றினார். போடி நகராட்சி அலுவலகத்தில் மேலாளர் முரளி தலைமையில், நகராட்சிப் பொறியாளர் சரவணன் தேசியக் கொடி ஏற்றிவைத்தார்.
போடி நகர் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நகரக் தலைவர் முசாக் மந்திரி தலைமையில், வார்டுகளில் கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது. தி கிரீன் லைப் பவுண்டேஷன் சார்பில், அதன் நிர்வாகிகள் பல்வேறு பள்ளிகளில் நடைபெற்ற சுதந்திர தின கொண்டாட்டங்களில் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டனர்.
போடி ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரியில், அதன் தலைவர் எஸ்.வி. சுப்பிரமணியன் கொடியேற்றினார். போடி அரசு பொறியியல் கல்லூரி, ஜ.கா.நி. பள்ளிகள், திருமலாபுரம் நாடார் மேல்நிலைப் பள்ளி, பங்கஜம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி,  அன்னை இந்திரா நினைவு ஆரம்பப் பள்ளி, சில்லமரத்துப்பட்டி, சிலமலை, தேவாரம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. 
போடி தருமத்துப்பட்டி ஏ.எச்.எம். டிரஸ்ட் வளாகத்தில் உள்ள நேசக் கரங்கள் முதியோர், ஆதரவற்றோர் இல்லம், தொழிற்பயிற்சி கூடம் ஆகியவற்றில் தேசியக் கொடியேற்றி வைத்து கொண்டாடப்பட்டது. டிரஸ்ட் இயக்குநர் முகமது சேக் இப்ராஹிம் மற்றும் பலர் பங்கேற்றனர்.   
போடி பிச்சாண்டி நடுநிலைப் பள்ளியில், தலைமையாசிரியர் இரா. ஜெயக்குமார் தலைமையில், பெற்றோர்-ஆசிரியர் சங்கத் தலைவர் ஜெயமணி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
கம்பம்: நகராட்சி அலுவலகத்தில் ஆணையர் (பொறுப்பு) பொறியாளர் செல்வராணி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். கம்பம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆணையர் நாகராஜ் தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். கம்பம் தெற்கு காவல் நிலையத்தில் சார்பு-ஆய்வாளர் முத்துச்செல்வன், வடக்கு காவல் நிலையத்தில் சார்பு- ஆய்வாளர் வினோத்ராஜா ஆகியோர் தேசியக் கொடியை ஏற்றி வைத்தனர்.
கம்பம் நாகமணியம்மாள் நினைவு மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில், தாளாளர்எம்.எஸ்.எஸ். காந்தவாசன், ஸ்ரீசக்தி விநாயகர் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் தாளாளர் வி. அச்சுத நாகசுந்தர், புனித மேரி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் முதல்வர் மேரிகுரியன், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர்-ஆசிரியர் சங்கத் தலைவர் எம்.பி. ராமர், ஆன்ஸ் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் தாளாளர் பாத்திமா அப்பாஸ் ஆகியோர் தேசியக் கொடியை ஏற்றினர்.
கூடலூர் நகராட்சி அலுவலகத்தில், ஆணையர் (பொறுப்பு) புஷ்பலதா, தெற்கு காவல் நிலையத்தில் ஆய்வாளர் சேகர், வடக்கு காவல் நிலையத்தில் ஆய்வாளர் சுரேஷ்குமார், குமுளி காவல் நிலையத்தில் சார்பு-ஆய்வாளர் உதயன் ஆகியோர் தேசியக் கொடியை ஏற்றிவைத்தனர். 
ஸ்ரீ ஆதிசுஞ்சனகிரி பெண்கள் கல்லூரியில், அதன் செயலர் என். ராமகிருஷ்ணன் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். 
ராயப்பன்பட்டி காவல் நிலையத்தில் சார்பு-ஆய்வாளர் கே. ஜெய்கணேஷ், சவரியப்ப உடையார் மேல்நிலைப் பள்ளியில் தாளாளர் எம்.எஸ். பிரபாகர், காமயகவுண்டன்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் கணேசன், கிராம நிர்வாக அலுவலர் ராமர் ஆகியோர் தேசியக் கொடியை ஏற்றிவைத்தனர்.
ஆண்டிபட்டி: பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவுக்கு, செயல் அலுவலர் பாலசுப்பிரமணி தலைமையேற்று தேசியக் கொடியை ஏற்றினார். ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் நடைபெற்ற விழாவில், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆண்டாள் கொடியேற்றினார். 
தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், கல்லூரியின் முதல்வர் க. ராஜேந்திரன் தலைமை வகித்து தேசியக் கொடியை ஏற்றிவைத்தார்.
ஆண்டிபட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், தலைமை ஆசிரியர் ரா.சேதுராமன் தலைமையில்,  ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் கணபதி தேசியக் கொடியை ஏற்றினார். ஆண்டிபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், மேலாண்மைக் குழு உறுப்பினர் சின்னன் தேசியக் கொடியேற்றினார். முத்தனம்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில், ஆண்டிபட்டி சட்டப்பேரவை உறுப்பினர் அ. மகாராஜன் கொடியேற்றினார். 
சக்கம்பட்டி முத்துமாரியம்மன் நகர் ஆரம்பப் பள்ளியில், தேசிய நல்லாசிரியர் (ஓய்வு) தில்லை நடராஜன் தலைமையில், கட்டபொம்மன் வேடத்தில் மாணவர் கோகுல் கொடியேற்றினார்.
ஏத்தகோவில் அரசு கள்ளர் தொடக்கப் பள்ளியில், தலைமை ஆசிரியர் சீத்தாலட்சுமி தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். ஆண்டிபட்டி லிட்டில் பிளவர் பள்ளியில், சி.எஸ்.ஐ. தேவாலயம் பங்குத்தந்தை எபினேசர் தேசியக் கொடியேற்றினார்.
ஆண்டிபட்டி டைமன் வித்யாலயா பள்ளியில், தாளாளர் டைமன் பாண்டிசெல்வம் தேசியக் கொடியேற்றினார். ஆண்டிபட்டி ஏஞ்சல் வித்யாலயா மெட்ரிக். பள்ளியில், தாளாளர் தங்கப்பாண்டியன் தேசியக் கொடியேற்றினார். ஆண்டிபட்டி எஸ்.கே.ஏ. மேல்நிலைப் பள்ளியில், தாளாளர் வச்சிரவேல் தேசியக் கொடியேற்றினார். 
ஆண்டிபட்டியில் இந்து முன்னணி சார்பில், காமராஜர் சிலை, முருகன் தியேட்டர் மற்றும் சக்கம்பட்டி அருகில் அமைப்பு கொடி ஏற்றி வீரவணக்கம் செலுத்தினர். 
இந்நிகழ்ச்சிக்கு, தேனி மாவட்டச் செயலர் டாக்டர் எஸ்.பி.எம். செல்வம் தலைமை வகித்து, அமைப்பு கொடியை ஏற்றிவைத்தார். இதில், சுதந்திரப் போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகள் மற்றும் ராணுவ வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. 
உத்தமபாளையம்:  ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சார்பு-நீதிமன்ற நீதிபதி கன்னிகாதேவி தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். உத்தமபாளையம்  கோட்டாட்சியர் அலுவலகத்தில் சார்-ஆட்சியர் வைத்தியநாதன் தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். காவல்  துணைக் கண்காணிப்பாளர்  அலுவலகத்தில், காவல் துணைக் காண்காணிப்பாளர் வீரபாண்டி தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். வட்டாட்சியர் அலுவகத்தில், வட்டாசியர் உதயராணி தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். உத்தமபாளையம் காவல் நிலையத்தில் ஆய்வாளர் முருகன் தேசியக் கொடியை ஏற்றிவைத்தார்.  
உத்தமபாளையம் ஹாஜி கருத்தராவுத்தர் ஹவுதியா கல்லூரியில், தாளாளர் எம். தர்வேஷ் முகைதீன் தலைமையில், சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட கல்லூரியின் முன்னாள் முதல்வர் ஷாகுல் ஹமீது தேசியக் கொடியை ஏற்றிவைத்தார்.
உத்தமபாளையம் முன்னாள் ராணுவ வீரர்கள் நலச் சங்கம் சார்பில், தலைவர் தங்கராஜ் தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். உத்தமபாளையம் பேரூராட்சியில் செயல் அலுவலர் கணேசன்  தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். 
பண்ணைப்புரம் பேரூராட்சியில் செயல் அலுவலர் பசீர் அகமது தேசியக் கொடியை ஏற்றினார். கோம்பை பேரூராட்சியில் செயல் அலுவலர் ஜெயலட்சுமி தேசியக் கொடியை ஏற்றினார். மார்க்கையன்கோட்டை பேரூராட்சியில் செயல் அலுவலர் சசிகலா  தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
குச்சனூர் பேரூராட்சியில் பணியாளர் இளவழகரசு  தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT