தேனி

ஒப்பந்ததாரர்களிடையே கருத்து வேறுபாடு: குடிநீர் திட்டப் பராமரிப்பு பணிக்கான ஏலம் ஒத்திவைப்பு

16th Aug 2019 07:04 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டத்தில் குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், கூட்டுக் குடிநீர் திட்டப் பராமரிப்பு பணிகளுக்காக புதன்கிழமை நடைபெறுவதாக  அறிவிக்கப்பட்டிருந்த ஏலம், அதிமுக, திமுக ஒப்பந்ததாரர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ஆகஸ்ட் 30-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் முல்லைப் பெரியாறு மற்றும் மூல வைகை ஆற்றுப் படுகைகளில் குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் 25 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த குடிநீர் திட்டங்கள் மற்றும் குழாய்களில் 2020  மார்ச் 31-ஆம் தேதி வரை பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்காக, தேனி குடிநீர் வடிகால் வாரிய கிராம குடிநீர் கோட்டம் சார்பில் ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டிருந்தது.
மொத்தம் ரூ.1.75 கோடி மதிப்பிலான இந்த ஏலத்தில் கலந்துகொள்ளவதற்கு, குடிநீர் வடிகால் வாரியத்தில் பதிவு பெற்றுள்ள 25-க்கும் மேற்பட்ட ஒப்பந்ததாரர்கள் குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்துக்கு வந்திருந்தனர்.
இதில், க.மயிலை ஒன்றியத்தில் திமுகவைச் சேர்ந்த ஒப்பந்ததாரர்கள் சிலர் ஏலத்தில் கலந்துகொள்வதற்கு, அதிமுகவைச் சேர்ந்த ஒப்பந்ததாரர்கள் ஆட்சேபணை தெரிவித்தனர். பின்னர், இரு தரப்பினரிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமூகத் தீர்வு ஏற்படவில்லை.
அதையடுத்து, 3 ஒப்பந்ததாரர்கள் மட்டுமே ஏலத்தில் கலந்துகொண்டு ஒப்பந்தப் புள்ளி அளித்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், மற்றொரு தரப்பைச் சேர்ந்த 15-க்கும் மேற்பட்டோர் இந்த ஏலத்தை புறக்கணிப்பதாக, குடிநீர் வாரிய நிர்வாகப் பொறியாளர் முருகேசனிடம் மனு அளித்துவிட்டு வெளியேறினர். இதையடுத்து, இந்த ஏலத்தை ஆகஸ்ட் 30-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக, குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகப் பொறியாளர் தெரிவித்தார்.
குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், பராமரிப்பு பணிகளுக்காக நடைபெற்ற ஏலம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால், தொடர் மழையால் ஆறுகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து வரும் நிலையில், கூட்டுக் குடிநீர் திட்டங்களில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT