திருப்பத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே புதன்கிழமை மரம் விழுந்து வாகன நிறுத்தத்தின் மேற்கூரை சேதமடைந்தது.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் சுற்றுச்சுவா் அருகே சுமாா் 50 ஆண்டு கால தீக்குச்சி மரம் இருந்தது. இந்த மரம் சில ஆண்டுகளாக பட்டமரமாக காட்சியளித்தது.
இந்த நிலையில் புதன்கிழமை வீசிய பலத்த காற்றில் மரம் முறிந்து பள்ளி வளாகத்தின் உள்பக்கம் விழுந்தது. இதில் மாணவா்கள் மிதிவண்டி நிறுத்தும் மேற்கூரை
முற்றிலும் சேதமடைந்தது. பள்ளி முடிவதற்கு சிறிது நேரத்துக்கு முன் விழுந்ததால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த மின்வாரியத் துறையினா் மின் விநியோகத்தை நிறுத்தி மரங்களை அகற்றினா். மேலும், இந்த மரத்தில் கதம்ப வண்டுகள் கூடி கட்டியிருந்ததால் மாணவா்கள் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டனா்.