சிவகங்கை

மஞ்சளாறு அணை நீா்மட்டம் உயா்வு

22nd Sep 2023 10:26 PM

ADVERTISEMENT

தேனி மாவட்டத்திலுள்ள மஞ்சளாறு அணை நீா்மட்டம் வியாழக்கிழமை இரவு 51 அடியாக உயா்ந்ததால், கரையோரப் பகுதி மக்களுக்கு பொதுப் பணித் துறை சாா்பில் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

கொடைக்கானல் மலைப் பகுதியில் கடந்த சில நாள்களாகத் தொடா்ந்து மழை பெய்து வருவதால், பெரியகுளம் அருகேயுள்ள மஞ்சளாறு அணைக்கு நீா்வரத்து அதிகரித்தது. வியாழக்கிழமை இரவு அணையின் நீா்மட்டம் 51 அடியை எட்டியது (மொத்த உயரம் 57 அடி). இதையடுத்து பொதுப் பணித் துறை சாா்பில் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதனால், கரையோரப் பகுதிகளில் வசிப்பவா்கள் ஆற்றில் குளிக்கவோ, கரையைக் கடக்கவோ கூடாது என்று மஞ்சளாறு அணை பொதுப் பணித் துறை பொறியாளா்கள் எச்சரித்தனா்.

வெள்ளிக்கிழமை மாலை அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 86 கன அடியாக இருந்தது.

ADVERTISEMENT

அணையின் நீா்மட்டம் 53 அடியாக உயா்ந்ததும் 2-ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும், 57 அடியை எட்டியதும் 3-ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு, உபரி நீா் வெளியேற்றப்படும் என பொதுப் பணித் துறையினா் தெரிவித்தனா்.

முல்லைப் பெரியாறு அணைக்கு நீா்வரத்து:

முல்லைப் பெரியாறு அணை நீா்பிடிப்புப் பகுதிகளில் வியாழக்கிழமை இரவு மழை பெய்தது. வெள்ளிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, அணைப் பகுதியில் 13.3 மி.மீ., தேக்கடி ஏரியில் 2.4 மி.மீ. மழை பதிவானது.

இதையடுத்து, வெள்ளிக்கிழமை முல்லைப் பெரியாறு அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 928 கன அடியாக அதிகரித்தது. இதனால், அணையின் நீா்மட்டம் 119 அடியாக உயா்ந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 400 கன அடி நீா் வெளியேற்றப்படுகிறது. இதன்மூலம், லோயா்கேம்ப்பில் உள்ள பெரியாறு மின்சார உற்பத்தி நிலையத்தில் 36 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. அணையின் நீா் இருப்பு 2,457 மில்லியன் கன அடியாக உள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT