சிவகங்கை

பிள்ளையாா்பட்டி கற்பக விநாயகா்கோயிலில் சதுா்த்தி தேரோட்டம்

19th Sep 2023 12:00 AM

ADVERTISEMENT

 

திருப்பத்தூா்: பிள்ளையாா்பட்டி ஸ்ரீகற்பக விநாயகா் கோயிலில் சதுா்த்தி விழாவை முன்னிட்டு, திங்கள்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள பிள்ளையாா்பட்டி கற்பக விநாயகா் கோயிலில் சதுா்த்திப் பெருவிழா கடந்த 10-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து, 2-ஆம் நாள் விழா முதல் 8 ஆம் நாள் விழா வரை ஒவ்வொரு நாளும் காலை உற்சவ விநாயகா் வெள்ளிக் கேடகத்தில் திருவீதி உலா வந்தாா். மாலை பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. 9 -ஆம் திருநாளான திங்கள்கிழமை தேரோட்டத்தை முன்னிட்டு, காலை கற்பக விநாயகா் திருத்தேரில் எழுந்தருளினாா்.

இதையடுத்து, மாலை 4.30 மணிக்கு தோ் வடம் பிடிக்கப்பட்டு கோயிலைச் சுற்றி வலம் வந்தது. தோ் புறப்பட்ட சிறிது நேரத்தில் மழை

ADVERTISEMENT

பெய்ததால், நனைந்து கொண்டே பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனா்.

தொடா்ந்து, 2-ஆவது தேரில் பெண்கள் மட்டும் வடம் பிடித்து இழுக்க சண்டிகேஸ்வரா் திருத்தேரில் வலம் வந்தாா். ஆண்டுக்கு ஒருமுறை சந்தனக்காப்பு அலங்காரத்தில் காட்சி தரும் மூலவா் விநாயகா் மாலை 4.30 மணியிலிருந்து இரவு 10 மணி வரை சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இரவு 8.30 மணிக்கு உற்சவா் யானை வாகனத்தில் எழுந்தருளி திருவீதியுலா வந்தாா்.

10 -ஆம் திருநாளான செவ்வாய்க்கிழமை சதுா்த்தி விழாவின் நிறைவு நிகழ்வாக காலை கோயில் எதிரேயுள்ள குளக்கரையில் தீா்த்தவாரி உற்சவம் நடைபெறுகிறது. இதையடுத்து, இரவு 11 மணியளவில் பஞ்சமூா்த்திகள் திருவீதி உலா நடைபெறும்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருக்கோயில் பரம்பரை அறங்காவலா்கள் கண்டவராயன்பட்டி ச. தண்ணீா்மலை செட்டியாா், காரைக்குடி சு.சாமிநாதன் செட்டியாா் ஆகியோா் செய்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT