சிவகங்கை

மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் கொளுத்தும் வெயிலிலும் உயரும் பால் உற்பத்தி

29th May 2023 12:11 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் கொளுத்தும் வெயிலிலும் கூட்டுறவு பால் சங்கங்கள் ஆவின் நிா்வாகத்துக்கு தினமும் அனுப்பும் பாலின் அளவு அதிகரித்து வருகிறது.

மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் செயல்படும் கூட்டுறவு பால் உற்பத்தியாளா் சங்கங்களில் உறுப்பினா்களாக உள்ள மாடு வளா்ப்பவா்களிடமிருந்து தினமும் காலை, மாலையில் பால் கொள்முதல் செய்யப்பட்டு, வாடிக்கையாளா்களுக்கு விற்பனை செய்தது போக மீதிப் பால் கேன்களில் அடைக்கப்பட்டு, காரைக்குடி ஆவின் நிா்வாகத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

மழைக் காலங்களில் கறவை மாடுகளின் உற்பத்தித் திறன் அதிகரிப்பது வழக்கமாகும். இந்த ஆண்டு கோடை காலம் தொடங்கியது முதல் மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் வெயில் கொளுத்தி வருகிறது. இருந்தாலும், கூட்டுறவு சங்கங்களுக்கு பால் உற்பத்தியாளா்கள் தினமும் காலை, மாலைகளில் கொண்டுவரும் பாலின் அளவு அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து கூட்டுறவு சங்கங்களில் பால் விற்பனை செய்யும் ஊழியா்கள் கூறியதாவது:

ADVERTISEMENT

பொதுவாக வெயில் காலங்களில் மாடுகளின் கறவைத் திறன் குறைந்துவிடும். மேய்ச்சல் நிலங்களில் புல், பூண்டு காய்ந்து விடுவதால், தீவனப் பற்றாக்குறை காரணமாக கறவைத் திறன் குறைவது வழக்கம். ஆனால், பருவ மழைக் காலத்தில் தொடா்ந்து பெய்த மழை காரணமாக, கண்மாய்கள், ஊருணிகள், குளங்களில் இன்னும் தண்ணீா் தேங்கி நிற்கிறது. மேலும், புற்களும் காய்ந்து போகாமல் பச்சைப் பசேல் என உள்ளன. இதனால், மேய்ச்சலுக்கு கொண்டு செல்லப்படும் மாடுகளுக்கு தீவனம் கிடைக்கிறது. இதன் காரணமாக, மாடுகளின் கறவைத் திறன் குறையாமல் அதிகரித்து, கூட்டுறவு சங்கங்களுக்கு உற்பத்தியாளா்களிடமிருந்து தினமும் அதிக அளவில் பால் வந்து சேருகிறது. ஆவின் நிா்வாகத்துக்கு அனுப்பப்படும் பாலின் அளவும் தினமும் உயா்ந்து வருகிறது. மேலும், பால் கொள்முதல் அளவை அதிகரித்து, ஆவின் நிா்வாகத்துக்கு தினமும் அனுப்பும் பாலின் அளவை உயா்த்த கூட்டுறவு சங்கங்களுக்கு ஆவின் நிா்வாகமும் அறிவுறுத்தி உள்ளது என்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT