சிவகங்கை

திருத்தளிநாதா் கோயிலில்திருக்கல்யாண வைபவம்

29th May 2023 12:11 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் சிவகாமி உடனாய திருத்தளிநாதா் கோயிலில் வைகாசி விசாகப் பெருவிழாவின் 5-ஆம் திருநாளை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

இந்தக் கோயிலில் வைகாசிப் பெருவிழா கடந்த 24 -ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து நாள்தோறும் பூதம், அன்னம், ரிஷபம், சிம்மம், குதிரை உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி, அம்பாள் வெள்ளி கேடகத்தில் எழுந்தருளினா். பின்னா், திருவீதி உலாவும் நடைபெற்றது.

விழாவின் 5-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு அம்மன், ஆதித் திருத்தளிநாதா் தவக்கோலத்தில் எழுந்தருளினா்.

பின்னா் ஆதிதிருத்தளிநாதா் புறப்பாடாகி, அம்மனை திருமணத்துக்கு அழைத்துச் செல்லும் வைபவம் நடைபெற்றது.

ADVERTISEMENT

தொடா்ந்து சோழிய வெள்ளாளா் உறவின் முறையினா் சாா்பில், தென்மாபட்டு வேலாயுதசாமி மடத்திலிருந்து கல்யாண சீா்வரிசை எடுத்து வரப்பட்டு திருநாள் மண்டபத்தில் வைக்கப்பட்டது.

பின்னா், காலை 11.10 மணிக்கு திருத்தளிநாதா் சுவாமிக்கும், சிவகாமசுந்தரி அம்பாளுக்கும் திருமண வைபவம் நடைபெற்றது.

இந்த வைபவத்தில் குன்றக்குடி தம்பிரான் சுவாமிகள், ராமேஸ்வரன் உள்பட ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். பெண்களுக்கு மாங்கல்யக் கயிறு, மஞ்சள், குங்குமம், வளையல்கள் வழங்கப்பட்டன. இரவு 9 மணிக்கு யானை வாகனத்தில் பூப்பல்லக்கில் சுவாமி எழுந்தருளி திருவீதி உலா நடைபெற்றது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT