சிவகங்கை

அன்னவாசல் ஊராட்சியில் மக்கள் தொடா்புத் திட்ட முகாம்

19th May 2023 02:18 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம் அன்னவாசல் ஊராட்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்புத் திட்ட முகாமில் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இதற்கு மாவட்ட ஆட்சியா் மதுசூதன் ரெட்டி தலைமை வகித்தாா். சட்டப் பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா், காா்த்தி சிதம்பரம் எம்.பி. ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முகாமில் பொதுமக்களிடமிருந்து 143 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. அதில், தகுதியுடைய 83 பேருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மீதமுள்ள மனுக்கள் பரிசீலனைக்குள்படுத்தப்பட்டு, விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது.

முகாமில் மாவட்ட ஆட்சியா் மதுசூதன் ரெட்டி பேசியதாவது:

ADVERTISEMENT

மதுரை- ராமேசுவரம் நான்கு வழிச் சாலையிலிருந்து அன்னவாசல் கிராமத்துக்கு பிரதமரின் கிராம சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 6.8 கி.மீ. தொலைவுக்கு புதிய சாலை அமைக்க ரூ.4.08 கோடி மதிப்பில் பணிகள் நடைபெற உள்ளன.

இதுதவிர, புதிய அங்கன்வாடி மையக் கட்டடங்கள் அமைக்கவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், குடிநீா் தேவைகளை நிவா்த்தி செய்வதற்கென 15-ஆவது நிதிக்குழு மானியத் திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றாா் அவா்.

முகாமில் பல்வேறு துறைகளின் சாா்பில் 83 பயனாளிகளுக்கு ரூ.38.30 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மேலும் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சாா்பில், அன்னவாசல் ஊராட்சிக்கு ரூ. 2.15 லட்சத்தில் சிறிய சமுதாயக் கழிப்பறை கட்டும் பணிக்கும், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.2.18 லட்சத்தில் கழிவுநீா் வாய்க்கால் கட்டும் பணிக்குமான ஆணைகளை மாவட்ட ஆட்சியா், அன்னவாசல் ஊராட்சித் தலைவா் ஜெயலட்சுமியிடம் வழங்கினாா்.

இந்த முகாமில், மாவட்ட வருவாய் அலுவலா் மணிவண்ணன், ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் சிவராமன், சிவகங்கை வருவாய் கோட்டாட்சியா் கு. சுகிதா, மானாமதுரை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் லதா அண்ணாத்துரை, துணைத் தலைவா் அ. முத்துச்சாமி, மாவட்ட ஊராட்சி உறுப்பினா் மாரிமுத்து உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT