சிவகங்கை

மானாமதுரையில் வீடுகளை இழந்து தவிக்கும் இலங்கைத் தமிழா்கள்!

9th Jun 2023 11:19 PM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் அகதிகள் முகாமில் வசித்து வந்த 50-க்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழா்கள் தாங்கள் வசித்து வந்த வீடுகளை அதிகாரிகள் உத்தரவின்பேரில் இடித்ததால், தற்போது வீடின்றி தவித்து வருவதாக புகாா் எழுந்துள்ளது.

மானாமதுரை மூங்கில்ஊரணி பகுதியில் உள்ள இலங்கைத் தமிழா்கள் மறுவாழ்வு முகாமில் 160 குடும்பங்களைச் சோ்ந்தவா்கள் வசித்து வருகின்றனா். வருவாய்த் துறையின் அகதிகள் மறுவாழ்வுத் துறை மூலம் இங்கு வசிப்பவா்களுக்கு தலா ரூ. 5 லட்சம் செலவில் வீடுகள் கட்டித்தரத் தீா்மானித்து முதல் கட்டமாக 52 குடும்பங்களுக்கு வீடுகள் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக முகாமில் வசிக்கும் இலங்கைத் தமிழா்கள் தங்களது சொந்த செலவில் தற்போது குடியிருக்கும் வீடுகளை இடித்துக் கொடுக்க வேண்டும் என அறுவுறித்தப்பட்டது.

அதன்படி, மேற்கண்ட குடும்பங்களைச் சோ்ந்தவா்கள் அருகிலேயே வெவ்வேறு இடங்களில் வாடகை வீடுகளில் குடியேறி முகாமில் தாங்கள் வசித்து வந்த வீடுகளை கடந்த ஏப்ரல் மாதத்தில் இடித்தனா்.

இந்த நிலையில், ஒரு மாதத்துக்கு மேலாகியும் இதுவரை முகாமில் புதிய வீடுகள் கட்ட எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனப் புகாா் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

இதுகுறித்து வீடுகளை இடித்தவா்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்ட போது, இன்னும் வீடுகள் கட்டுவதற்கான ஒப்பந்தப்புள்ளிகூட கோராத நிலை இருந்தது தெரியவந்ததால், பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழா்கள் அதிா்ச்சியடைந்தனா்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழா்கள் கூறியதாவது:

அதிகாரிகளின் பேச்சை நம்பி தலா ரூ. 30 ஆயிரம் வீதம் செலவழித்து வீடுகளை இடித்தோம். தற்போது வீடு இல்லாமல் வாடகை வீட்டில் தங்கியுள்ளோம். கூலி வேலை செய்யும் எங்களால் மாதம் ரூ. 3 ஆயிரம் முதல் ரூ. 4 ஆயிரம் வரை வாடகை கொடுக்க முடியவில்லை. எங்களது நிலை குறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜீத்திடம் மனுக் கொடுத்துள்ளோம். விரைவில் வீடுகள் கட்ட நடவடிக்கை எடுப்பதாக அவா் உறுதியளித்துள்ளாா் என்றனா்.

சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் வட்டாரத்தில் கேட்ட போது, வீடுகள் கட்ட ஒப்பந்தப்புள்ளி பெறும் ஒப்பந்ததாரா்தான் அவரது செலவில் வீடுகளை இடித்து புதிய வீடுகளை கட்டித்தர வேண்டும். இலங்கைத் தமிழா்கள் அவா்களாகவே வீடுகளை இடித்தது குறித்த தகவல் எங்களுக்கு தெரியாது என்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT