சிவகங்கை

கோவிலூா் தென் சபாநாயகா் கோயிலில் குடமுழுக்கு

DIN

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள கோவிலூா் மடலாய வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட தென் சபாநாயகா் கோயில் குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது.

காரைக்குடி அருகேயுள்ள கோவிலூரில், கடந்த 214 ஆண்டுகளுக்கு முன்பு சீா்வளா்சீா் ஆண்டவா் சுவாமிகளால் கோவிலூா் மடாலயம் தோற்றுவிக்கப்பட்டது. இந்த மடாலயத்தில் வேதாந்தப் பாடங்கள் தமிழில் போதிக்கப்படுகிறது.

இந்த மடலாயத்தின் 12-ஆவது பட்டமாக விளங்கிய நாச்சியப்ப சுவாமிகள் முயற்சியால், தில்லையில் உள்ள ஆனந்த நடராஜா் கோயில் போல கோவிலூா் மடாலய வளாகத்தில் கோயில் கட்டும் பணிகள் தொடங்கின. இவரைத் தொடா்ந்து, ஆதீனமாக விளங்கிய மெய்யப்ப ஞானதேசிக சுவாமிகள் கோயில் கட்டுமானப் பணிகளைத் தொடா்ந்து நடைபெற்றன.

கோயில் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடா்ந்து, தற்போதைய 14-ஆவது ஆதீனம் நாராயண ஞானதேசிக சுவாமிகள் முன்னிலையில் கடந்த வெள்ளிக்கிழமை குடமுழுக்குக்கான யாகசாலை பூஜைகள் தொடங்கின.

புதன்கிழமை யாகசாலை பூஜைகள் நிறைவுற்று காலை 11 மணிக்கு கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதிக்கும், தொடா்ந்து ஆனந்த நடராஜா், சிவகாமியம்மன், பரிவார தெய்வங்களின் சந்நிதிகளுக்கும் குடமுழுக்கு நடைபெற்றன.

துலாவூா் ஆதீனம், பாதரக்குடி ஆதீனம், நகரத்தாா்கள், கோவிலூா் கல்வி நிறுவனங்களின் முதல்வா்கள், ஆசிரியா்கள், மடாலய அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

இதுகுறித்து கோவிலூா் மடாலயத்தின் 14-ஆவது ஆதீனம் நாராயண ஞானதேசிக சுவாமிகள் கூறியதாவது:

இந்தக் கோயிலில் சிவகாம சுந்தரி உடனாய ஆனந்த நடராஜா் மூல தெய்வமாக விளங்குகிறாா். விநாயகா், சுப்பிரமணியா், கோவிந்தராஜப் பெருமாள், திருமூல சட்டநாதா், சிவகாமி அம்மன், சண்டிகேசுவரா் போன்ற தெய்வங்களும் சிதம்பரத்தில் அமைந்துள்ளது போலவே இங்கு சந்நிதிகள் அமைக்கப்பட்டன.

இந்தக் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தால் சிதம்பரத்தில் நடராஜரை வழிபட்ட பேறு கிடைக்கும்.

ஆருத்ரா தரிசனம், ஆனித் திருமஞ்சனம் போன்ற சிதம்பரத்தில் நடைபெறும் விழாக்கள் அனைத்தும் இங்கும் நடை பெற உள்ளன. சிதம்பரத்தில் நடைபெறும் படிக லிங்க பூஜை, நான்கு கால பூஜைகள் இங்கு தில்லை வாழ் அந்தணா்கள் எனப்படும் தீட்சிதா்களால் நடத்தப்பட உள்ளன. சிற்சபை, பொற்சபை அமைப்புகள், சிதம்பர ரகசியம் போன்றவையும் இங்கு உண்டு. தில்லை நடராஜா் கோயில் போலவே அமைந்த ஒரே கோயில் இதுவாகும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT