சிவகங்கை

மக்கள் குறை தீா்க்கும் கூட்டம்: பயனாளிகளுக்கு ரூ. 6.50 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள்

6th Jun 2023 04:53 AM

ADVERTISEMENT

சிவகங்கையில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீா்க்கும் கூட்டத்தில் பயனாளிகளுக்கு ரூ. 6.50 லட்சத்தில் நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் வழங்கினாா்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா, சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் உதவித்தொகை, மாவட்ட ஊனமுற்றோா், மறுவாழ்வுத் துறை உதவித் தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள், புதிய மின்னணு குடும்ப அட்டை போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுமக்களிடமிருந்து 345 மனுக்கள் பெறப்பட்டன.

இதைத்தொடா்ந்து, தொழிலாளா் நலத் துறை சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், 10 பயனாளிகளுக்கு ஓய்வூதியத் தொகை, இயற்கை மரண உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகள், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் சாா்பில், 2022-ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருதுக்குத் தோ்வு செய்யப்பட்ட 2 பயனாளிகளுக்கு தலா ரூ.1,00, 000 மதிப்பிலான காசோலை, பாராட்டுச் சான்றிதழ், தாட்கோ திட்டத்தின் சாா்பில், 2 பயனாளிகளுக்கு டிராக்டா் வாங்க தலா ரூ.2,25,000 மானியத் தொகைக்கான ஆணைகள் என மொத்தம் 14 பயனாளிகளுக்கு ரூ.6,50,000 மதிப்பிலான அரசின் நலத் திட்ட உதவிகளை ஆட்சியா் ஆஷா அஜித் வழங்கினாா்.

கூட்டத்தில் சிவகங்கை மாவட்ட வருவாய் அலுவலா் ப. மணிவண்ணன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) (பொறுப்பு) ச. ரத்தினவேல், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் (பொறுப்பு) பி. சாந்தி, தொழிலாளா் நலத் துறை உதவி ஆணையா் கோட்டீஸ்வரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT