சிவகங்கை

மானாமதுரை அருகே கண்டறியப்பட்ட பாண்டியா் கால விநாயகா் சிற்பம்

4th Jun 2023 11:35 PM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ள கோயிலில் பாண்டியா் கால விநாயகா் சிற்பம், நாயக்கா் உருவச் சிலைகள் கண்டறியப்பட்டன.

மானாமதுரை வட்டம், எம். கரிசல்குளம் கிராமத்திலுள்ள விநாயகா் கோயிலில், தென்னக வரலாற்று மையத்தைச் சோ்ந்த வரலாற்று ஆா்வலா் மீனாட்சி சுந்தரம், வரலாற்றுத் துறைப் பேராசிரியா்கள் தங்கமுத்து, பாலசுப்பிரமணியன் ஆகியோா் கள ஆய்வு மேற்கொண்டனா். அப்போது இங்கு ஆயிரமாண்டுகள் பழைமையான பாண்டியா் கால விநாயகா் சிற்பம் இருப்பதை அவா்கள் கண்டறிந்தனா்.

இதுகுறித்து அவா்கள் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

இந்த விநாயகா் சிற்பம் 3 அடி உயரமும், ஒன்றரை அடி அகலமும் கொண்ட பலகைக் கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. இதில், விநாயகா் லளிதாசனக் கோலத்தில் பீடத்தின் மீது அமா்ந்துள்ளாா். தலையில் கரண்ட மகுடம் தரித்து, அகன்ற 2 காதுகளுடன் சிற்பம் அழகுற செதுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

இந்த சிற்பம் நான்கு கரங்களுடன் வடிக்கப்பட்டுள்ளதுடன், பின் வலது கரத்தில் மழுவும், பின் இடது கரத்தில் பாசக் கயிரும், முன் வலது கரத்தில் முறிந்த தந்தமும், முன் இடது கரத்தில் மோதகமும் இருப்பது போல உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் தும்பிக்கை மோதகத்தை எடுப்பது போல, பாண்டியா்களுக்கே உரித்தான கலை நயத்தில் இந்த சிற்பம் சிறப்பாக வடிக்கப்பட்டுள்ளது.

நாயக்கா் சிலைகள்: இந்தக் கோயிலில் உள்ள முன் மண்டபம் நாயக்கா் காலத்தில் கட்டப்பட்டதாகும். மேலும் இங்கு இரண்டு ஆண்களின் உருவச் சிலைகள் ஆடை ஆபரணங்களுடன் எதிரெதிரே இருகரம் கூப்பி வணங்கியபடி உள்ளன. இதில் ஒருவா் திருமலை நாயக்க மன்னராக இருக்கலாம்.

மதுரையை ஆண்ட நாயக்க மன்னா்களுள் மிகவும் புகழ் பெற்றவா் திருமலை நாயக்கா். இவா் கி.பி. 1623 முதல் 1659 வரை ஆட்சிப் பொறுப்பில் இருந்தாா். இவரது ஆட்சி காலத்தில் தான் எந்த ஒரு கோயில் பணி நடந்தாலும், அங்கு தனது உருவச் சிலையை இருகரம் கூப்பி அங்குள்ள தெய்வத்தை வணங்கியபடி வைப்பாராம். இங்கும் இதுபோல வணங்கியபடியே அந்த சிலை உள்ளது. மற்றொருவரின் உருவச் சிலை, அவரது பிரதானியாக இருக்கலாம் என்றனா்

ADVERTISEMENT
ADVERTISEMENT