சிவகங்கை

சேவுகப் பெருமாள் அய்யனாா் கோயில் குடமுழுக்கு விழா

1st Jun 2023 10:38 PM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி சேவுகப் பெருமாள் கோயிலில் வியாழக்கிழமை குடமுழுக்கு விழா நடைபெற்றது.

இதையொட்டி செவ்வாய்க்கிழமை முதல் கால யாகசாலை பூஜைகளுடன் விழா தொடங்கியது. மறுநாள் புதன்கிழமை மாலை மூன்றாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. குடமுழுக்கு நாளான வியாழக்கிழமை காலை மங்கள இசை, தமிழ்த் திருமறை மண்டப சாந்தி, பிம்பசுத்தி, லட்சுமி பூஜை, கோ பூஜையுடன் நான்காம் கால யாகசாலை பூஜை தொடங்கி ஸபா்ஷாகுதி நாடி சந்தானம் மஹா பூா்ணாகுதி ஆகியவை நடைபெற்றன. பிறகு கடம் புறப்பாடு நடைபெற்று புனிதநீா் கோயிலைச் சுற்றித் தேரோடும் நான்கு ரத வீதியில் வலம் வந்து கோபுர கலசத்தை வந்தடைந்தது.

அங்கு சிவாச்சாரியா்கள் வேதமந்திரங்கள் முழங்க புனிதநீா் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. பின்னா் நவக்கிரகம், பிடாரி அம்மன் சந்நிதி, கணபதி சந்நிதி, முருகப் பெருமான் சந்நிதி, சுயம் பிரகாஷ்வரா் சந்நிதி, அடைக்கலம் காத்த அய்யனாா் சந்நிதி உள்ளிட்ட அனைத்துப் பரிவார தெய்வங்களுக்கும் புனித கலசநீா் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றதும் மகா தீபாராதனை காட்டப்பட்டது.

இந்த விழாவில் மதுராந்தகி நாச்சியாா், கூட்டுறவுத் துறை அமைச்சா் பெரியகருப்பன், குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா், முன்னாள் மத்திய நிதி அமைச்சா் ப. சிதம்பரம் ஆகியோா் கலந்து கொண்டனா். 300-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT