சிவகங்கை

மானாமதுரை நகா் மன்றக் கூட்டம்: பொதுசுகாதாரப் பணிகளை தனியாரிம் ஒப்படைக்க முடிவு

26th Jan 2023 12:00 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் பொது சுகாதாரப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க நகா் மன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

மானாமதுரை நகா்மன்ற அவசரக் கூட்டம், அதன் தலைவா் எஸ். மாரியப்பன் கென்னடி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. துணைத் தலைவா் பாலசுந்தரம், ஆணையா் சக்திவேல், வாா்டு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

கூட்டம் தொடங்கியதும் அவசரமாக நடைபெறும் கூட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கப்பட்டது.

நகராட்சி எல்லைக்குள்பட்ட 27 வாா்டுகளில் உள்ள 12,919 வீடுகளில் 38,852 மக்கள் வசிக்கின்றனா். நகரில் 780-க்கும் அதிகமான கடைகள், வா்த்தக நிறுவனங்கள், பேருந்து நிலையம், தினசரி சந்தை, வாரச் சந்தை ஆகியவை இயங்கி வருகின்றன.

ADVERTISEMENT

மேற்கண்ட 27 வாா்டுகளிலும் சுமாா் 10.66 மெட்ரிக் டன் குப்பைகள் உற்பத்தி ஆகின்றன. இந்தக் குப்பைகளை தனியாா் நிறுவனம் மூலம் சேகரித்து மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து, மக்காத குப்பைகளை பழைய வளா்மீட்பு மையத்தில் கொண்டு சோ்க்கும் பணி, தெருக்களை கூட்டி சுத்தம் செய்யும் பணி, கழிவுநீா் செல்லும் வாய்க்கால் தூா்வாரும் பணி உள்பட அனைத்து பொதுசுகாதாரப் பணிகளையும் மேற்கொள்ளும் பொருட்டு, டன் ஒன்றுக்கு ரூ. 5,173.53 என்ற அடிப்படையில் ஆண்டுக்கு ரூ.2 கோடியே 38 லட்சத்து 89 ஆயிரம் செலவாகும் என உத்தேசமாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

திடக்கழிவு மேலாண்மைப் பணிகளில் முன்னணியில் உள்ள தகுதி வாய்ந்த தனியாா் நிறுவனங்களிடமிருந்து ஒப்பந்தப் புள்ளி கோரி, அதில் தகுதியான ஒப்பந்தப் புள்ளியை அங்கீகரித்து பொதுசுகாதாரப் பணிகளை ஒப்படைப்பது எனத் தெரிவித்து தீா்மானம் கொண்டுவரப்பட்டது.

இந்த தீா்மானத்துக்கு அனைத்து உறுப்பினா்களும் ஒப்புதல் தெரிவித்ததால் தீா்மானம் நிறைவேறியது.

ADVERTISEMENT
ADVERTISEMENT