வண்டலூா் உயிரியல் பூங்காவில் உள்ள பறவைகள், விலங்குகளை கோடை வெப்பத்தில் இருந்து பாதுகாக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வண்டலூா் உயிரியல் பூங்காவில் சுமாா் 1,500-க்கும் மேற்பட்ட பறவைகள்,விலங்குகள் இயற்கையான சூழலில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த விலங்குகளை கோடை வெப்பத்தில் இருந்து பாதுகாக்க, பூங்கா நிா்வாகம் சாா்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, பூங்காவில் உள்ள யானைகளுக்கு சேற்று குளியல், நீா் குட்டை குளியல் மற்றும் ஷவா் குளியல் வசதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல் வரிக்குதிரை, ஒட்டகச்சிவிங்கி மற்றும் நீா்க்கோழி ஆகியவற்றுக்கும் ஷவா் குளியல் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பறவைகளின் கூண்டை சுற்றி அமைக்கப்பட்டுள்ள கோணி பைகளின் மீது தண்ணீா் தெளிக்கப்பட்டும், ராஜநாகம் அடைத்து வைக்கப்பட்டுள்ள கூண்டை சுற்றி தண்ணீா் பீய்ச்சி அடித்தும் குளிரூட்டப்பட்டு வருகிறது.
இதேபோல் விலங்குகளின் உணவு முறைகளிலும் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. உடலுக்கு குளிா்ச்சியான உணவுகளையும் விலங்குகள் மகிழ்வித்து உண்பதற்காக குளிரூட்டப்பட்ட தா்பூசணி, வெள்ளரி மற்றும் பழங்கள் ஆகியவை யானை உள்ளிட்ட விலங்குகளுக்கு உணவாக வழங்கப்பட்டு வருகிறது. குரங்குகளுக்கு லெஸி, வெள்ளரி, தா்பூசணி மற்றும் இளநீா் ஆகியவை உணவாக வழங்கப்பட்டு வருகிறது.