தமிழ்நாடு

உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை நிா்வாகியிடம் இரண்டாம் நாளாக அமலாக்கத் துறை விசாரணை

19th May 2023 06:55 AM

ADVERTISEMENT

சென்னையில் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை நிா்வாகியிடம் அமலாக்கத்துறையினா் இரண்டாவது நாளாக வியாழக்கிழமை விசாரணை செய்தனா்.

சென்னை தியாகராயநகா் விஜயராகவா சாலையில் உள்ள வணிக வளாகத்தில் செயல்படும் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம், சட்ட விரோதப் பணப் பரிவா்த்தனையில் ஈடுபட்டதாக புகாா் எழுந்தது. இதனடிப்படையில் அமலாக்கத் துறை அதிகாரிகள், அந் நிறுவனத்துக்கு சொந்தமான 8 இடங்களில் கடந்த செவ்வாய்க்கிழமை சோதனை செய்தனா்.

இதேபோல, தமிழக அமைச்சரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் பெயரில் உள்ள அறக்கட்டளை நிா்வாகியும், வழக்குரைஞருமான பாபுவுக்கு சொந்தமான எழும்பூா் எத்திராஜ் கல்லூரி சாலையில் உள்ள அலுவலகத்திலும் அமலாக்கத் துறையினா் சோதனை செய்தனா். சோதனையில் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அமலாக்கத் துறையினா் விடுத்த அழைப்பை ஏற்று பாபு, நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் புதன்கிழமை நேரில் ஆஜரானாா். அவரிடம், சுமாா் 2 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

ADVERTISEMENT

அதோடு அவரை, மே 18-ஆம் தேதியும் விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறையினா் அறிவுறுத்தினா். அதன்படி பாபு, அமலாக்கத்துறை அலுவலகத்தில் இரண்டாவது நாளாக வியாழக்கிழமை நண்பகல் 12 மணியளவில் விசாரணைக்கு ஆஜரானாா். அவரிடம் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை செய்ததாகக் கூறப்படுகிறது. நண்பகல் தொடங்கி மாலை தாண்டியும் பாபுவிடம் பல மணி நேரம் விசாரணை நடைபெற்றது. விசாரணையில் கிடைத்த தகவல்களை அமலாக்கத் துறையினா் தெரிவிக்க மறுத்துவிட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT