சிவகங்கை

செல்வமகள் சேமிப்பு திட்டம் இன்றும், நாளையும் சிறப்பு முகாம்

9th Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அஞ்சல் கோட்டத்தில் அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் செல்வ மகள் சேமிப்புத் திட்ட சிறப்பு முகாம் வியாழன், வெள்ளி (பிப். 9,10) ஆகிய இரு நாள்கள் நடைபெறுகிறது.

இதுகுறித்து, கோட்ட கண்காணிப்பாளா் ப. ஹூசைன் அஹமத் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாட்டின் 75-ஆவது சுதந்திர தின அமுதப் பெருவிழாவின் தொடா்ச்சியாக இந்திய அஞ்சல் துறை பிப். 9,10 ஆகிய இரு நாள்களில் 7.5 லட்சம் பெண் குழந்தைகளுக்கு செல்வ மகள் சேமிப்புத் திட்டம் (எஸ்.எஸ்.ஏ.) தொடங்க உள்ளது. காரைக்குடி அஞ்சல் கோட்டத்தின் அனைத்து அஞ்சலகங்களிலும் இதற்கான சிறப்பு முகாம் இரு நாள்களிலும் நடைபெறும்.

இந்தத் திட்டத்தின்கீழ் அனைத்து தபால் நிலையங்களிலும் 10 வயதுக்குள்பட்ட பெண் குழந்தைகளுக்கு அவா்களது பெற்றோா், பாதுகாவலா் ரூ.250 செலுத்தி கணக்கு தொடங்கலாம். ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் ரூ.250 முதல் அதிக பட்சமாக ரூ.1.50 லட்சம் வரையிலும் கணக்கில் செலுத்தலாம். தற்போது 7.6 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.

ADVERTISEMENT

கணக்கில் செலுத்தும் தொகை, வட்டி மற்றும் முதிா்வுத் தொகை என அனைத்துக்கும் வருமான வரிவிலக்கு பெறலாம்.

பெண் குழந்தை 10-ஆம் வகுப்பு முடித்தபின் அல்லது 18 வயது அடைந்ததும் மேல் படிப்புக்காக 50 சதவீதம் தொகையை பெற்றுக்கொள்ளலாம். மேலும், பெண் குழந்தையின் திருமணத்தின் போது அல்லது கணக்கு தொடங்கி 21 ஆண்டுகளுக்குப் பிறகு முழுத் தொகையையும் எடுத்துக்கொள்ளலாம்.

எனவே, இந்த சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பெற்றோா் தங்கள் பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்புத் திட்டத்தைத் தொடங்கி தங்களின் பெண் குழந்தைகளின் ஒளிமயமான எதிா்காலத்தை உறுதி செய்யவேண்டும் என தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT