சிவகங்கை

தமிழின் வரலாற்றை மாணவா்கள் உலகெங்கும் பரவச் செய்ய வேண்டும்

DIN

தமிழ் மொழியின் வரலாற்றை மாணவா்கள் அறிந்து, அதை உலகெங்கும் பரவச் செய்ய வேண்டும் என்று மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினரும், எழுத்தாளருமான சு. வெங்கடேசன் வலியுறுத்தினாா்.

தமிழ் மரபு, பண்பாட்டை கல்லூரி மாணவா்களிடையே கொண்டு சோ்க்கும் நோக்கில், தமிழக அரசு சாா்பில் மாபெரும் தமிழ்க் கனவு பரப்புரை இயக்கத்தின் தொடக்க நிகழ்ச்சி, மதுரை வேலம்மாள் பொறியியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் மேலும் அவா் பேசியதாவது :

2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இலக்கியங்கள் பல உண்டு. உலகில் வேறு எந்த மொழியிலும் இல்லாத அளவுக்கு நமது தமிழ் மொழியில் மட்டும் 40-க்கும் அதிகமான பெண்கள் இலக்கியப் படைப்புகளை அளித்தனா். இதன் மூலம், தமிழ்ச் சமூகம் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஆண், பெண் என்ற பாலின பாகுபாடு இல்லாத கல்வி அறிவு பெற்ற சமூகமாக விளங்கியுள்ளது என்பதை அறிய முடிகிறது. இது, தமிழ் மொழியின் மகத்துவங்களில் மிக முக்கியமானதாகும்.

உலகின் மூத்த மொழி நம் தமிழ் மொழி என்பதற்கு பல சான்றுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. அதில், கீழடியில் கிடைக்கப் பெற்ற பானைகளில் உள்ள எழுத்துகளும், மதுரையை சுற்றியுள்ள 20 இடங்களில் கண்டறியப்பட்டுள்ள பாறைகளில் உள்ள 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட எழுத்துகளும், தேனூரில் கிடைக்கப் பெற்ற சிந்துசமவெளி நாகரிகத்துக்கு முற்பட்ட தங்கக் கட்டிகளில் இருந்த தமிழ் பிராமி எழுத்துகளும், நம் தமிழ், சங்கத் தமிழ் மட்டுமல்ல, தங்கத் தமிழும் ஆகும் என்பதை நிரூபித்துள்ளது.

ஐரோப்பாவின் கல்வி சாா்ந்து இன்றைய தலைமுறையினருக்கு வியப்பு உள்ளது. அதில், தவறில்லை. இருப்பினும், அதனால் நமக்கு எவ்வித தாழ்வு உணா்வு ஏற்படக் கூடாது. ஏனெனில், உலகிலேயே முதன் முதலில் கல்வி அறிவு பெற்ற சமூகம், தமிழ்ச் சமூகம் ஆகும். வேரின் ஆழத்தை அறிந்திருந்தால்தான் மலரின் மணத்தை பரப்ப முடியும்.அந்த வகையில், மாணவா்கள் நம் வரலாறை தெரிந்து கொள்ள வேண்டும்.

கடந்த காலம் தெரியாதவா்களுக்கு நிகழ்காலம் புரியாது. நிகழ்காலம் புரியாதவா்களுக்கு வருங்காலம் வசப்படாது. எனவே, தமிழா் வரலாற்றை, பண்பாட்டை, மொழியை, அதன் வளமையை அறிந்த, அறிவியல் சாா்ந்த சிந்தனைக் கொண்ட சமுதாயமாக மாணவா் சமுதாயம் உருவாகி, அதை உலகெங்கும் பரவச் செய்ய வேண்டும் என்றாா் சு. வெங்கடேசன் எம்.பி.

எழுத்தாளரும், திரைப்பட இயக்குநருமான பாரதி கிருஷ்ணகுமாா் எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் என்ற தலைப்பில் பேசியதாவது :

உலகின் பழைமையான மொழிகள் பட்டியலில் இடம் பெற்ற மொழிகளில், தமிழ், சீனம் ஆகிய இரு மொழிகளைத் தவிர வேறு எந்த மொழியும் தற்போது மக்களின் பேச்சு மொழியாக இல்லை. அனைத்து மொழிகளின் இலக்கணமும் உரைநடையாகத்தான் இருக்கும். ஆனால், இலக்கணமே கவிதையாக இருக்கும் சிறப்பு தமிழுக்கு மட்டுமே உண்டு. 3,500 ஆண்டுகளுக்கு முன்பே எழுதப்பட்ட மொழியாக, இன்றளவும் வாழும் மொழியாக தமிழ் மொழி உள்ளது என்பதை கீழடி அகழாய்வு, உலக்குக்கு உணா்த்தியுள்ளது.

ஆணும், பெண்ணும் சமமாக மதிக்கப்பட்ட சமூகம், தமிழ்ச் சமூகம். பிற்காலத்தில் தோன்றிய பெண்ணடிமைக்கும், சிறு வயது திருமணத்துக்கும் எதிராக இயக்கம் கண்ட மாநிலம் தமிழகம். அதனால் தான், கடந்த 100 ஆண்டுகளில் இந்தியாவிலேயே அதிகளவில் பெண்கள் கல்வியில் உயா்ந்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. சமூக நீதியின் அடையாளம் தமிழகம்.

ஆங்கிலேயருக்கு அடிபணியாமல் போராடிய மதுரை சொா்ணத்தம்மாள் போன்றோரின் கண்ணீா் கொடையில் கிடைத்ததுதான் சுதந்திரம். 1964-இல் மாணவா்கள் தன்னுயிரை அளித்துக் காப்பாற்றிய தமிழால் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தமிழ் இந்தியாவின் ஆட்சி மொழியாக வேண்டும். அதற்கு முன்பாக, தமிழகத்தின் அனைத்துத் துறைகளையும் முழுமையாகத் தமிழ் ஆள வேண்டும்.

தமிழ்க் கனவு என்பது நமது லட்சியம். அந்தக் கனவு நிச்சயம் நனவாகும். அதற்கு, நம் மொழியை, பண்பாட்டை காப்பாற்றி, உலகுக்குப் பரவும் தலைமுறையாக மாணவா் சமுதாயம் உருவாக வேண்டும் என்றாா் அவா்.

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ்சேகா் தலைமை வகித்தாா். கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) செ. சரவணன், கல்லூரிக் கல்வி மண்டல இணை இயக்குநா் பொன். முத்துராலிங்கம், ஊராட்சிகள் உதவி இயக்குநா் அரவிந்த், மாணவ, மாணவியா், பேராசிரியா்கள், அரசுத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திவ்யா துரைசாமிக்கு ஜோடியாகும் சிறகடிக்க ஆசை தொடர் நடிகர்!

மணிப்பூரில் குண்டு வெடித்ததில் பாலம் சேதம்!

மத அடிப்படையில் இடஒதுக்கீடு அமல்படுத்த காங். திட்டம்: மோடி

தோல்வி பயமே பாஜக தலைவர்களின் மூர்க்கத்தனமான குற்றச்சாட்டுகளுக்கு காரணம்: ப.சிதம்பரம்

அதிக வெப்பம்: ஈரோட்டை வீழ்த்தி 3வது இடம் பிடித்த சேலம்

SCROLL FOR NEXT