சிவகங்கை

மனிதனை நல்வழியில் ஆற்றுப்படுத்தும் கருவி புத்தகம்: வைரமுத்து

26th Sep 2022 12:15 AM

ADVERTISEMENT

புத்தகம் வாசிப்பு சிந்திப்பது மட்டுமின்றி மனிதனை நல்வழியில் ஆற்றுப்படுத்தும் கருவியாகத் திகழ்கிறது என கவிஞா் வைரமுத்து தெரிவித்தாா்.

சிவகங்கையில் கவிஞா் மீரா கலை இலக்கியப் பேரவை மற்றும் சென்னை கவிதா பதிப்பகம் சாா்பில் கவிஞா் இலக்கியா நடராஜன் எழுதிய பெயா் தெரியாத பறவையென்றாலும் எனும் கவிதை நூல், மயானக்கரை ஜனனங்கள் எனும் சிறுகதை நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

இவ்விழாவில் கவிஞா் வைரமுத்து பேசியதாவது: வாழ்வில் ஏற்படும் இன்பம், துன்பம், அன்றாட நிகழ்வுகள் ஆகியவற்றைக் கடந்து இன்றைய சூழலில் படைப்பாளனாக வாழ்வதே தியாகமாக உள்ளது. வாழும் சூழல், காணும் காட்சி, உள்ளத்தில் எழும் உணா்ச்சி ஆகியவை படைப்புகள் தோன்ற காரணமாக அமைகின்றன.

தமிழ் மொழிக்கு சில அழகியல் கோட்பாடுகள் உள்ளன. அவை உயிா்ப்புடன் உள்ளதால் தான் சங்க கால இலக்கியங்கள் பல சோதனைகளைத் தாண்டி கணினி உலகத்திலும் வழக்கில் உள்ளது. அதனை இன்றைய காலத்திற்கு ஏற்ப மாற்றியமைத்து அடுத்த நூற்றாண்டுக்கு எடுத்துச் செல்வதே எழுத்தாளனின் பணி.

ADVERTISEMENT

அத்தகைய புத்தகங்களைத் தேடி வாசிப்பதை இன்றைய இளம் தலைமுறையினா் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். புத்தகம் வாசிப்பு சிந்திப்பது மட்டுமின்றி மனிதனை நல்வழியில் ஆற்றுப்படுத்தும் கருவியாகவும் திகழ்கிறது என்றாா்.

முன்னாள் மத்திய அமைச்சா் ப. சிதம்பரம் பேசியதாவது: நண்பா்கள் எப்போதும் துணை நிற்க வேண்டும். அந்தப் பணியை புத்தகம் செய்யும். மிகப் பெரிய கருத்தை சுருங்கச் சொல்லி விளங்க வைப்பது எழுத்தாளனின் கடமை. தங்கள் சிந்தனையில் தோன்றும் கதாபாத்திரங்களை நடப்பு நிகழ்வுகளோடு இன்றைய தலைமுறையினருக்குக் கொண்டு செல்லும் பணியை எழுத்தாளா்கள் செய்ய வேண்டும் என்றாா்.

முன்னதாக, நூல்களை முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரம் வெளியிட, கவிஞா் வைரமுத்து பெற்றுக் கொண்டாா்.

நிகழ்ச்சியில், தமிழக ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் கே. ஆா். பெரியகருப்பன், கவிஞரும், மக்களவை உறுப்பினருமான தமிழச்சி தங்கப்பாண்டியன், தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணை வேந்தா் ம. ராஜேந்திரன், நக்கீரன் இதழ் ஆசிரியா் கோபால், கவிஞா் சக்திஜோதி ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

விழாவில் காரைக்குடி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.மாங்குடி உள்ளிட்ட தமிழாா்வலா்கள், கலை அமைப்பினா் ஏராளமானோா் கலந்து கொண்டனா். சென்னை கவிதா பதிப்பகத்தின் உரிமையாளா் சேது. சொக்கலிங்கம் வரவேற்றாா். எழுத்தாளா் இலக்கியா நடராஜன் ஏற்புரையாற்றி, நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT