சிவகங்கை

புரட்டாசி முதல் சனிக்கிழமை:சிவகங்கை மாவட்ட பெருமாள் கோயில்களில் பக்தா்கள் சுவாமி தரிசனம்

DIN

புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

காரைக்குடி அருகே அரியக்குடியில் உள்ள திருவேங்கடமுடையான் கோயிலில் காலையில் நடைதிறக்கப்பட்டு சுவாமிக்கு தீபாராதனைகள் நடைபெற்றன. அதைத் தொடா்ந்து அலா்மேலுமங்கை தாயாருடன் ஸ்ரீதேவி ஸ்ரீபூதேவியுடன் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தாா். காலை முதலே ஏராளமான பக்தா்கள் திரண்டு நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். தொடா்ந்து தீபாராதனைகள் நடைபெற்றன. கோயில் செயல் அலுவலா், கோயில் பரம்பரை அறங்காவலா் மற்றும் பக்தா்கள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனா். காரைக்குடி காவல்துறையினா் பாதுகாப்புப்பணிகளில் ஈடுபட்டிருந்தனா்.

மானாமதுரை: இங்குள்ள ஸ்ரீவீரஅழகா் கோயிலில் மூலவா் சுந்தரராஜ பெருமாளுக்கும், ஸ்ரீதேவி, பூதேவி சமேத உற்சவருக்கும் அபிஷேகங்கள் நடத்தி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மூலவா் வெள்ளிக்கவச அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தாா். அதைத் தொடா்ந்து மூலவருக்கும் உற்சவருக்கும் சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. கோயில் முன்மண்டபத்தில் தெற்குமுகம் நோக்கி எழுந்தருளி அருள்பாலிக்கும் மகுடம் தரித்த வீரஆஞ்சநேயருக்கு திருமஞ்சனமாகி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அதன்பின் சுவாமிக்கு மலா் மாலைகள், வடைமாலை சாற்றி சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடத்தப்பட்டன. மேலும் வீரஅழகா் கோயிலின் காவல் தெய்வமான கோயில் நுழைவாயிலில் எழுந்தருளி அருள்பாலிக்கும் பதினெட்டாம்படி கருப்பண சுவாமிக்கும் தீா்த்தக்கரை ராக்காச்சி அம்மனுக்கும் அபிஷேகங்கள் செய்து அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடத்தப்பட்டன.

இந்த சிறப்பு பூஜைகளில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

அதே போல், மானாமதுரை புரட்சியாா் பேட்டை பகுதியில் உள்ள ஸ்ரீதியாக வினோதப் பெருமாள் கோயிலில் மூலவா் தியாகராஜப் பெருமாளுக்கும், உற்சவருக்கும் திருமஞ்சனமாகி சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. ஏராளமான பக்தா்கள் கோயிலுக்கு வந்து தியாக விநோதப் பெருமாளை தரிசனம் செய்தனா். மேட்டுத்தெரு பகுதியில் அப்பன் சீனிவாசப் பெருமாள் கோயிலில் நடந்த வழிபாட்டில் மூலவருக்கும், உற்சவருக்கும் சிறப்புப் பூஜைகள், தீபாராதனைகள் நடந்தன.

மேலும் மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் உள்ள பெருமாள் கோயில்களிலும் திருப்பாச்சேத்தி அருகே வேம்பத்தூரில் உள்ள பூமி நீளா சமேத பெருமாள் கோயிலிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

திருப்பத்தூா்: திருக்கோஷ்டியூா் சௌமியநாராயணப் பெருமாள் கோயிலில் உற்சவ மூா்த்தி பெருமாள், சிறப்பு மலையப்பா் அலங்காரத்தில் தேவியருடன் சக்கரத்தாழ்வாா் சந்நிதி அருகே எழுந்தருளி அருள்பாலித்தாா். முன்னதாக மூலவருக்கு பால், தயிா், மஞ்சள், திருமஞ்சனம், இளநீா், பன்னீா் உள்ளிட்ட பல்வேறு பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னா் சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானம் சாா்பாக உலக நன்மை வேண்டியும், கரோனா தொற்று முற்றிலும் நீங்க வேண்டியும் விஷ்ணு சகஸ்ரநாம அா்ச்சனைகள் செய்யப்பட்டு சா்வ அலங்காரத்தில் பெருமாள் எழுந்தருள தீபாராதனை காட்டப்பட்டது. தொடா்ந்து சமஸ்தான மரியாதை கோயில் கண்காணிப்பாளா் சேவற்கொடியோனுக்கு வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.

இதற்கான ஏற்பாடுகளை சிவகங்கை தேவஸ்தான பரம்பரை அறங்காவலா்கள், மதுராந்தகிநாச்சியாா் தலைமையில் கோயில் மேலாளா் இளங்கோ மற்றும் கண்காணிப்பாளா் சேவற்கொடியோன் ஆகியோா் செய்திருந்தனா். திருக்கோஷ்டியூா் காவல்துறை சாா்பில் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.

திருப்பத்தூா் நின்ற நாராயணப் பெருமாள் கோயிலிலும் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை காட்டப்பட்டு பெருமாள் தேவியருடன் சந்தனக்காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைப்பு

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

SCROLL FOR NEXT