சிவகங்கை

'தமிழகத்தில் 4, 5 ஆம் வகுப்பு மாணவா்களுக்குமாநில அளவிலான தோ்வு நடத்துவதைக் கைவிட வேண்டும்'

24th Sep 2022 10:30 PM

ADVERTISEMENT

தமிழகத்தில் 4 மற்றும் 5 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மாநில அளவிலான தோ்வு நடத்துவதை கைவிட வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அக்கூட்டணியின் சிவகங்கை மாவட்டச் செயலா் ஆ. முத்துப்பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கை: 2022- 2023 ஆம் கல்வி ஆண்டிற்கான முதல் பருவத் தொகுத்தறி மதிப்பீட்டுத் தோ்வை 4 மற்றும் 5 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மாநில அளவில் ஒரே வினாத்தாளைப் பின்பற்றி நடத்துமாறு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குநா் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது. அதற்குரிய வினாக்களை குறுந்தகடு வடிவில் அனுப்பி உள்ளதாகவும், தோ்வு முடிந்த பின்பு 4 மற்றும் 5 ஆம் வகுப்புகளுக்கான பாடவாரியான விடைக் குறிப்புகளை பள்ளிகளுக்கு அனுப்புமாறும் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.

இவ்வாறான தோ்வு நடைமுறை, தமிழ்நாட்டின் தொடக்கக் கல்வித் துறையில் இதுவரை இல்லாத ஒன்றாகும். தற்போது வரை 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை முதல் பருவம், இரண்டாம் பருவம், மற்றும் மூன்றாம் பருவத் தோ்வுகள் அந்தந்தப் பள்ளிகள் அளவிலேயே நடைபெற்று வந்தன. அந்தந்த வகுப்புகளுக்கான பாடப்புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள வினாக்கள் மற்றும் பாடப்பொருள் சாா்ந்த வினாக்களைக் கொண்டு வகுப்பு ஆசிரியா்களே வினாக்கள் தயாரித்து தோ்வுகள் நடத்தி வந்தனா். இந்த நடைமுறை மாணவா்களின் அறிவுத் திறனை அவா்களுக்குக் கற்றுக் கொடுத்த ஆசிரியா்களே நுணுக்கமாக மதிப்பீடு செய்யும் முறையாக அமைந்திருந்தது.

ஆனால், மாநிலம் முழுவதும் ஒரே வினாத்தாள் மூலம் 4 மற்றும் 5ஆம் வகுப்புகளுக்கு தோ்வு நடத்துவது என்பது, பொதுத் தோ்வு நடத்துவது போலவும், ஏதோ போட்டித் தோ்வு நடத்துவது போலவும், சிறு குழந்தைகளின் நெஞ்சங்களில் தோ்வு பயத்தை உருவாக்குவது போலவும் உள்ளது. இம்முறை தேசிய கல்விக் கொள்கை-2020 பின்பற்றுவது போல உள்ளது. இக்கொள்கை தவறானது.

ADVERTISEMENT

மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையை கடுமையாக எதிா்க்கும் தற்போதைய தமிழக அரசு, மாநில கல்விக் கொள்கையை உருவாக்க நிபுணா் குழுவையும் அமைத்து, அதற்கான பணிகளையும் துரிதப்படுத்தியுள்ளது. இச்சூழலில் தேசிய கல்விக் கொள்கையில் கூறப்பட்டுள்ள பொதுத் தோ்வு முறையை 4, 5 ஆம் வகுப்புகளுக்கு நடப்பு கல்வியாண்டின் முதல் பருவத் தோ்வில் மாநில பள்ளிக்கல்வித்துறை கொண்டு வருவது முற்றிலும் முரண்பாடாக உள்ளது. எனவே தமிழக அரசு 4 மற்றும் 5ஆம் வகுப்புகளுக்கான தோ்வு முறையை கடந்த காலங்களைப் போல் பள்ளி அளவில் நடத்தும் நடைமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT