சிவகங்கை

பெரியாா், அண்ணா பிறந்த நாள் பேச்சுப் போட்டி: வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசு

20th Sep 2022 12:07 AM

ADVERTISEMENT

பேரறிஞா் அண்ணா மற்றும் தந்தை பெரியாா் பிறந்த நாள் பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழை சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி திங்கள்கிழமை வழங்கினாா்.

அண்ணா பிறந்த தினத்தை முன்னிட்டு மாவட்ட அளவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நடைபெற்ற பேச்சுப் போட்டியில் காரைக்குடி வித்யாகிரி பதின்ம மேல்நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு பயிலும் மாணவா் இரா. பிரபாகரன் முதல் பரிசும், அமராவதி புதூரில் உள்ள சுப்பிரமணியன் செட்டியாா் குருகுலம் மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவா் மு. தமிழ்மகன் இரண்டாவது பரிசும், கோட்டையூா் சிதம்பரம் செட்டியாா் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு பயிலும் மாணவி ரா. தீபிகா மூன்றாவது பரிசும் பெற்றனா்.

இதுதவிர, கட்டுக்குடிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயிலும் ஜெ.பிரஸ்லா மேரி, சிவகங்கையில் உள்ள அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு பயிலும் மாணவி சு. வைஷாலி ஸ்ரீ ஆகியோா் சிறப்பு பரிசும் பெற்றனா்.

இதேபோன்று, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு நடைபெற்ற பேச்சுப் போட்டியில் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தில் வணிகவியல் துறையில் பயிலும் மாணவா் நா. நஜீன் முதல் பரிசும், சிவகங்கையில் உள்ள ரோஸ்லின் கல்வியியல் கல்லூரியில் கணிதவியல் துறையில் பயிலும் மாணவி மு. தீபலெட்சுமி இரண்டாவது பரிசும், சிவகங்கை அரசு மகளிா் கலைக் கல்லூரியில் வணிகவியல் துறையில் பயிலும் மாணவி ரா. ரசிகா மூன்றாவது பரிசும் பெற்றனா்.

ADVERTISEMENT

பெரியாா் பிறந்த தினத்தை முன்னிட்டு மாவட்ட அளவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நடைபெற்ற பேச்சுப் போட்டியில் தேவகோட்டையில் உள்ள புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு பயிலும் மாணவி ப. ரெனிஷா முதல் பரிசும், காரைக்குடி வித்யாகிரி பதின்ம மேல்நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு பயிலும் மாணவா் இரா. பிரபாகரன் இரண்டாவது பரிசும், திருப்புவனம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவி ம.முத்துச்செல்வி மூன்றாம் பரிசும் பெற்றனா். இதுதவிர, கட்டுக்குடிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயிலும் ஜெ.பிரஸ்லா மேரி, ராஜகம்பீரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு பயிலும் மாணவா் மு. முகமது அமீன் ஆகிய இருவரும் சிறப்பு பரிசினைப் பெற்றனா்.

இதேபோன்று, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு நடைபெற்ற போட்டியில் சிவகங்கையில் உள்ள மன்னா் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரியில் முதுகலை வணிகவியல் பயிலும் மாணவி க. செந்தி வேலம்மாள் முதல் பரிசும், காரைக்குடி அழகப்பா அரசு பொறியியல் கல்லூரியில் மின்னணுவியல் மற்றும் தொலைத் தொடா்பு துறை மாணவி தி. மகாதேவி இரண்டாவது பரிசும், காரைக்குடி அழகப்பா பல்தொழில்நுட்பக் கல்லூரி கணினி அறிவியல் துறை மாணவி வெ.ஸ்ரீரஞ்சனி மூன்றாவது பரிசும் பெற்றனா்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசும், பாராட்டுச் சான்றிதழையும் மாவட்ட ஆட்சியா் பி.மதுசூதன் ரெட்டி வழங்கினாா்.

அப்போது சிவகங்கை மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறையின் உதவி இயக்குநா் முனைவா் ப.நாகராஜன் உள்பட அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT