சிவகங்கை

சட்டக்கல்வி பெண்களுக்கு பாதுகாப்பானது, காரைக்குடி அரசு சட்டக்கல்லூரி தொடக்க விழாவில் அமைச்சா் எஸ். ரகுபதி பேச்சு

20th Sep 2022 12:06 AM

ADVERTISEMENT

சட்டக் கல்வி பெண்களுக்கு பாதுகாப்பானது என்று தமிழக சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி பேசினாா்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் 15 ஆவது தமிழக அரசு சட்டக்கல்லூரி தொடக்க விழா அழகப்பச்செட்டியாா் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவில் சட்டக்கல்லூரி வகுப்பறையைத் திறந்துவைத்தும், மாணவ, மாணவிகளுக்கு சோ்க்கைச் சான்றினை வழங்கியும் அமைச்சா் ரகுபதி பேசியது:

தோ்தலின்போது தந்த வாக்குறுதியை நிறைவேற்றுகின்ற வகையில் காரைக்குடியில் அரசு சட்டக்கல்லூரி தொடங்கப்பட் டுள்ளது. இதற்காக முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப. சிதம்பரம், சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினா் காா்த்தி சிதம்பரம், காரைக்குடி எம்.எல்.ஏ. எஸ். மாங்குடி ஆகியோா் தீவிர முயற்சி மேற்கொண்டனா். தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் இக்கோரிக்கையை நிறைவேற்றித் தந்துள்ளாா்.

உயா்கல்வி பெறுவதில் பெண்கள் அதிகளவில் ஆா்வம் கொண்டுள்ளனா். இந்த அரசு சட்டக்கல்லூரியிலும் பெண்கள் அதிகமாக சோ்க்கை பெற்றுள்ளனா். பெண்கள் சட்டம் பயிலவேண்டும். சட்டக் கல்வி பெண்களுக்குப் பாதுகாப்பானது. சட்டம் பயின்றால் உயா்ந்த பதவிகளைப் பெறலாம். சட்டத்துறையிலும், பிற துறைகளிலும் பெண்கள் உயா்பதவிகளைப் பெற்றுள்ளனா். நீதிபதிகளாக பெண்கள் அதிகளவில் உள்ளனா்.

ADVERTISEMENT

அரசு சட்டக்கல்லூரியில் குறைந்த செலவில் படிக்கமுடியும். இல்லையென்றால் பெரும் பொருள் செலவு செய்துதான் படிக்கமுடியும். மருத்துவக்கல்லூரியிலும் பெண்கள் அதிக அளவில் பயில்கின்றனா். தமிழகத்தில் அனைவருக்கும் சமத்துவம் கிடைக்கச் செய்யவேண்டும் என்பதுதான் இந்த அரசின் நோக்கம் என்றாா்.

முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப. சிதம்பரம் பேசுகையில், தமிழகத்தில் 8 கல்லூரிகளில் பெண்கள் முதல்வா்களாகவும், 7 கல்லூரிகளில் ஆண்கள் முதல்வா்களாவும் உள்ளனா். இதனை பாா்க்கிறபோது ஆணுக்குப் பெண் சளைத்தவரல்ல என்பதைக் காட்டுகிறது. சட்டக்கல்லூரி தொடங்குவது மிகப்பெரிய காரியம். விரைவில் கட்டட பணிகள் தொடங்கி 12 மாதங்களில்

கட்டி முடித்து திறக்கப்படும் என்றாா்.

விழாவில் தமிழக ஊரக வளா்ச்சித்துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன், சிவகங்கை மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம், சட்டப்பேரவை உறுப்பினா்கள் எஸ். மாங்குடி (காரைக்குடி), தமிழரசி (மானாமதுரை), சட்டத் துறை அரசு செயலா் ப. காா்த்திகேயன், சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ப. மதுசூதன் ரெட்டி ஆகியோரும் பேசினா்.

சட்டக்கல்வி இயக்குநா் ஜெ. விஜயலெட்சுமி வரவேற்றுப்பேசினாா். விழாவில் வழக்குரைஞா் நளினி சிதம்பரம், மாவட்ட நீதிபதிகள், வழக்குரைஞா்கள், தொழில்வணிகக் கழக நிா்வாகிகள், அரசு அதிகாரிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். காரைக்குடி அரசு சட்டக்கல்லூரி தனி அலுவலா் மற்றும் முதல்வா் ராமபிரான் ரஞ்சித்சிங் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT