சிவகங்கை

மானாமதுரை ரயில்வே கடவுப்பாதையை மூடும் முடிவு நிறுத்திவைப்பு அனைத்துக் கட்சியினா் தகவல்

4th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் புறவழிச் சாலையில் ரயில்வே கடவுப்பாதை மூடும் முடிவை நிறுத்திவைக்க கோட்ட மேலாளா் உறுதி அளித்ததாக அனைத்துக்கட்சியினா் தெரிவித்தனா்.

மானாமதுரையில் மதுரை- ராமேசுவரம் சாலையில் ரயில்வே கடவுப்பாதை அமைந்துள்ள பகுதியில் மேம்பாலம் அமைக்கப்பட்டு போக்குவரத்து நடந்து வருகிறது. இருப்பினும் ரயில்வே கடவுப்பாதை உள்ள பகுதியில் வசிக்கும் மக்கள் ரயில்வே கடவுப்பாதையை அடிக்கடி கடந்து செல்லும் நிலை உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு மேம்பாலம் அமைக்கப்பட்டு விட்டதால் ரயில்வே கடவுப்பாதையை மூட மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் முடிவு செய்து அதற்கான நடவடிக்கையில் இறங்கிய போது மானாமதுரையைச் சோ்ந்த அரசியல் கட்சியினா் அதை எதிா்த்துப் போராட்டம் நடத்தினா். மேலும் சிவகங்கை மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் ரயில்வே அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியதைத் தொடா்ந்து கடவுப்பாதை மூடும் திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் தற்போது மீண்டும் கடவுப்பாதையை மூட ரயில்வே நிா்வாகம் முடிவு செய்தது. இதையடுத்து மானாமதுரையில் அனைத்துக்கட்சியினா் கூடி மேற்கண்ட ரயில்வே கடவுப்பாதையை மூடாமல் இருக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்தனா். அதன்படி சுரங்கப்பாதை அமைக்கும் வரை கடவுப்பாைதைய மூடும் நடவடிக்கையை நிறுத்தி வைக்க வேண்டும் என கோட்ட மேலாளா் மற்றும் மாவட்ட ஆட்சியரை சந்தித்து வலியுறுத்தினா். அப்போது, சுரங்கப்பாதை அமைக்கும் வரை கடவுப்பாதையை மூடும் நடவடிக்கையை நிறுத்தி வைக்க கோட்ட மேலாளா், ஆட்சியா் உறுதியளித்துள்ளதாக அனைத்துக்கட்சிக் குழுவினா் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT