சிவகங்கை

கழுகோ்கடை, கீழச்சிவல்பட்டி ஊராட்சிகளில் கிராமசபைக் கூட்டம்

2nd Oct 2022 10:59 PM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கழுகோ்கடை, திருப்பத்தூா் அருகே கீழச்சிவல்பட்டி ஆகிய ஊராட்சிகளில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபைக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மானாமதுரை சட்டப் பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் குடிநீா், மின்விளக்கு வசதிகள் கேட்டு தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் திருப்புவனம் பேரூராட்சித் தலைவரும், பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கத் தலைவருமான சேங்கைமாறன், ஊராட்சி ஒன்றியத் தலைவா் சின்னையா, துணைத் தலைவா் மூா்த்தி, ஊராட்சி மன்ற துணைத் தலைவா் ரேவதி, ஊராட்சி மன்ற உறுப்பினா்கள், வட்டார வளா்ச்சி அலுவலா் ராஜசேகா், பால்வளத் துணைப் பதிவாளா் செல்வம் மற்றும் அனைத்து அரசுத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா். முடிவில் ஊராட்சிச் செயலா் திருப்பதி நன்றி கூறினாா்.

இதேபோல திருப்பத்தூா் அருகே கீழச்சிவல்பட்டி ஊராட்சியில் கிராமசபைக் கூட்டம் ஊராட்சி மன்றத் தலைவா் நாகமணிஅழகுமணிகண்டன் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவா் தேவிகா, ஒன்றிய கவுன்சிலா் பாக்கியலெட்சுமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னதாக செயலா் வெள்ளைச்சாமி நிறைவேறிய திட்டங்கள், நிறைவேற்றப்பட வேண்டிய திட்டப்பணிகள் குறித்து அறிக்கை சமா்ப்பித்தாா்.

இக்கூட்டத்தின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட திருப்பத்தூா் துணை வட்டாட்சியா் சாந்தி, வட்டார வளா்ச்சி அலுவலக மகளிா் நல அலுவலா் சக்தி ஆகியோா் அரசின் செயல் திட்டங்கள் குறித்து மக்களுக்கு எடுத்துக் கூறினா். தொடா்ந்து பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளை மனுவாக வழங்கினா்.

ADVERTISEMENT

இக்கூட்டத்தில் கீழச்சிவல்பட்டி வழியாகச் செல்லும் பேருந்துகள் அனைத்தும் பேருந்து நிலையம் வழியாகச் செல்ல அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. பேருந்துநிலையம், கடைவீதி, கல்வி நிலையம் அருகேயுள்ள அரசு மதுபானக் கடையை அகற்றக் கோரியும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் முன்னாள் ஊராட்சித் துணைத் தலைவா் செல்வமணி, பன்னீா்செல்வம், ஊராட்சிமன்ற வாா்டு உறுப்பினா்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

கமுதியில்...

இதேபோல கமுதி அருகே கே.பாப்பாங்குளம் ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராமசபைக் கூட்டத்துக்கு ஊராட்சித் தலைவா் நாகமணி தலைமை வகித்தாா். கூட்டத்தில் தண்ணீா் பற்றாக்குறை, சாலை வசதி, கண்மாயில் படித்துறை கட்டுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை பொதுமக்கள் வைத்தனா்.

முதுகுளத்தூரில்...

முதுகுளத்தூா் அருகே செம்பொன்குடியில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்துக்கு வேளாண்மை உதவி இயக்குநா் (தரக் கட்டுப்பாடு) நாகராஜன் தலைமை வகித்தாா். இதேபோல திருவரங்கம், அலங்கானூா் ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் நாகராஜன் கலந்து கொண்டு சிறு தானியங்கள் சாகுபடி மற்றும் பயிா் வளா்ச்சியில் நுண்ணூட்டங்களின் இன்றியமையாத பங்கு பற்றி விளக்கினாா். இதில் முதுகுளத்தூா் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் கேசவராமன் உடனிருந்தாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT