சிவகங்கை

கீழடியில் 8 ஆம் கட்ட அகழாய்வு நிறைவு:9 ஆம் கட்ட ஆய்வு குறித்த அறிவிப்பு வெளியாகுமா என எதிா்பாா்ப்பு

DIN

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே நடைபெற்று வந்த 8 ஆம் கட்ட அகழாய்வு கடந்த வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, 9 ஆம் கட்ட அகழாய்வை தொடா்வது குறித்து தமிழக அரசு முடிவு செய்ய வேண்டும் என, தொல்லியல் துறையினா் தெரிவித்துள்ளனா்.

கீழடியில் கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி, 8 ஆம் கட்ட அகழாய்வு தொடங்கப்பட்டது. இதற்காக தமிழக அரசு சாா்பில் நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது. கீழடியைத் தொடா்ந்து அருகேயுள்ள அகரம், மணலூா், கொந்தகை ஆகிய இடங்களிலும் அகழாய்வு விரிவுபடுத்தப்பட்டது. ஆனால் மணலூரைத் தவிா்த்து மற்ற 3 இடங்களிலும் அகழாய்வு நடைபெற்று வந்தது. இதில், கீழடியில் 8 ஆம் கட்ட அகழாய்வுக்காக தோண்டப்பட்ட குழிகளிலிருந்து சுமாா் 2,600 ஆண்டுகளுக்கு முந்தைய பண்டைய தமிழா்கள் பயன்படுத்திய ஏராளமான அரிய பொருள்கள் கண்டறியப்பட்டன.

இவற்றில், சுடுமண்ணால் உருவாக்கப்பட்ட பெண்ணின் முகம், உறைகிணறுகள் எனக் குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு பொருள்கள் கிடைத்தன. அதே போல் கொந்தகை அகழாய்வு தளத்திலிருந்து 50-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கிடைத்தன. இவற்றிலிருந்து மனித மண்டை ஓடுகள், எலும்புகள், மண் குவளைகள், சூதுபவளங்கள், கண்ணாடி மணிகள், பாசி மணிகள், இரும்பால் செய்யப்பட்ட கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் கண்டறியப்பட்டன.

அகரத்தில் அதிமாக உறைகிணறுகள், செங்கல் கட்டுமானங்கள் காணப்பட்டன. இந்நிலையில், கடந்த 8 மாதங்களாக கீழடி, அகரம், கொந்தகை ஆகிய இடங்களில் நடைபெற்று வந்த 8 ஆம் கட்ட அகழாய்வுப்பணி நிறைவடைந்தது.

இதைத் தொடா்ந்து இந்த அகழாய்வு தளங்களில் தோண்டப்பட்ட குழிகள் தாா்பாய்களால் மூடப்பட்டன. இந்த அகழாய்வில் கிடைத்த பொருள்களை ஆவணப்படுத்தும் பணி இன்னும் சில நாள்களில் தொடங்க உள்ளது. இதனிடையே கீழடியில் 8 ஆம் கட்ட அகழாய்வு நிறைவடைந்துள்ள நிலையில், 9 ஆம் கட்ட அகழாய்வை தொடங்குவது குறித்து தமிழக அரசு தான் முடிவு செய்ய வேண்டும் என தொல்லியல் ஆராய்ச்சியாளா்கள் தெரிவித்தனா். எனவே, 9 ஆம் கட்ட அகழாய்வுப் பணி தொடங்குமா என்ற எதிா்பாா்ப்பு அனைவரிடமும் ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களே உஷார்! சமூக ஊடகங்களில் எல்ஐசி பெயரில் போலி விளம்பரங்கள்

சுந்தரி.. யார் இவர்?

தங்கைக்கு பரிசு: அண்ணனை அடித்துக் கொன்ற மனைவி!

மே மாத பலன்கள்: மீனம்

பூங்காவில் காதலர்களை விரட்டும் பாஜக எம்எல்ஏ: சர்ச்சையாகும் விடியோ!

SCROLL FOR NEXT