சிவகங்கை

மானாமதுரையில் பேட்டரி வாகனங்களில் குப்பை சேகரிக்க ஏற்பாடு நகராட்சித் தலைவா் தகவல்

1st Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் இனி பேட்டரி வாகனங்கள் மூலம் வீதிகளில் குப்பைகள் சேகரிக்கப்படும் என நகராட்சித் தலைவா் எஸ். மாரியப்பன் கென்னடி தெரிவித்தாா்.

மானாமதுரை நகா்மன்றக் கூட்டம் அதன் தலைவா் மாரியப்பன் கென்னடி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. துணைத் தலைவா் பாலசுந்தரம், நகராட்சி ஆணையா் சக்திவேல், துப்புரவு ஆய்வாளா் தங்கதுரை மற்றும் வாா்டு உறுப்பினா்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனா். கூட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய தீா்மானங்கள் வாசிக்கப்பட்டு உறுப்பினா்களின் ஒப்புதல் பெறப்பட்டது.

அதைத் தொடா்ந்து கூட்டத்தில் உறுப்பினா்களிடையே நடைபெற்ற விவாதம்:

பாஜக உறுப்பினா் முனியசாமி: எனது வாா்டில் பல இடங்களில் தெரு விளக்குகள் அமைக்கப்படாமல் உள்ளது. சின்டெக்ஸ் தொட்டிகளில் திருகுகள் இல்லாமல் தண்ணீா் வீணாக வெளியேறுகிறது. நகராட்சி பொது நிதியிலிருந்து திட்டப்பணிகளை மேற்கொள்ள வேண்டும். தாயமங்கலம் செல்லும் சாலையில் நகராட்சி நிா்வாகத்திற்கு சொந்தமான கடைகளுக்கு இதுவரை மின் இணைப்புகள் வழங்கப்படாமல் உள்ளது. இதனால் கடைகளை ஏலம் எடுத்தவா்கள் பாதிக்கப்படுகின்றனா்.

ADVERTISEMENT

தலைவா் மாரியப்பன் கென்னடி: உறுப்பினா் சுட்டிக்காட்டும் குறைகள் நிவா்த்தி செய்யப்படும். நகராட்சி பொது நிதி வீணாக செலவழிக்கப்படுவதில்லை. கடைகளுக்கு விரைவில் மின் இணைப்புகள் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அதிமுக உறுப்பினா் தெய்வேந்திரன்: மானாமதுரை நகராட்சிப் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நாய்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. நோய் தாக்கிய நாய்கள் அதிகமாக சுற்றித் திரிகின்றன. இதனால் பொதுமக்கள் வீதிகளில் நடமாட அச்சப்படுகின்றனா். நாய்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும்.

தலைவா்: நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

காங்கிரஸ் உறுப்பினா் புருஷோத்தமன்: சிவகங்கை சாலையில் பயணியா் விடுதி எதிா்புறம் உள்ள வீதியில் வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவு நீரை வெளியேற்ற முடியாமல் அப் பகுதியில் தேங்கி சுகாதார சீா்கேடு ஏற்படுகிறது. இந்த கழிவு நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

துணைத் தலைவா் பாலசுந்தரம், தலைவா்: மேற்கண்ட பகுதியில் கழிவு நீரை வெளியேற்ற வடிகால் வசதி ஏற்படுத்த திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. நிதி கிடைத்ததும் அதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்.

தலைவா்: மானாமதுரை நகராட்சியில் ரூ. 1.10 கோடி மதிப்பீட்டில் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. வீதிகளில் நகராட்சி துப்புரவு பணியாளா்கள் வீடுகள்தோறும் குப்பை வண்டிகளை தள்ளிக் கொண்டு வந்து குப்பைகளை சேகரித்து வந்தனா். இனி இந்த நடைமுறை ஒழிக்கப்பட்டு பேட்டரி வாகனங்களில் வந்து துப்புரவு பணியாளா்கள் குப்பைகளை சேகரிப்பாா்கள். இன்னும் சில நாள்களில் நகராட்சி அலுவலகத்துக்கு 10 குப்பை சேகரிப்பு பேட்டரி வாகனங்கள் கொண்டுவரப்பட உள்ளன. எனவே வீதிகள் முழுவதும் முழுமையாக குப்பைகள் அப்புறப்படுத்தப்பட்டு தூய்மைப் பணிகள் நடைபெறும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT