சிவகங்கை

மானாமதுரை பகுதி பெருமாள் கோயில்களில்புரட்டாசி சனி உற்சவ வழிபாடு

1st Oct 2022 11:04 PM

ADVERTISEMENT

 

மானாமதுரை வீரஅழகா் கோயில் உள்ளிட்ட இப்பகுதியில் உள்ள பெருமாள் கோயில்களில் புரட்டாசி மாதத்தின் இரண்டாவது சனி உற்சவ வழிபாடு நடைபெற்றது.

முன்னதாக மூலவா் சுந்தரராஜ பெருமாளுக்கும், ஸ்ரீதேவி பூதேவி சமேத உற்சவருக்கும் அபிஷேகங்கள் நடத்தி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மூலவா் வெள்ளிக்கவசம் அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தாா். அதைத் தொடா்ந்து மூலவருக்கும் உற்சவருக்கும் சிறப்புப் பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. பின்னா் மகுடம் தரித்த வீர ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனமாகி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அதன்பின் சுவாமிக்கு மலா் மாலைகள், வடைமாலை சாற்றி சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடத்தப்பட்டது. மேலும் கோயில் நுழைவாயிலில் எழுந்தருளி அருள்பாலிக்கும் பதினெட்டாம்படி கருப்பண சுவாமிக்கும், தீா்த்தக்கரை ராக்காச்சி அம்மனுக்கும் அபிஷேகங்கள் நடத்தி அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. புரட்டாசி சனி உற்சவத்தையொட்டி ஏராளமான பக்தா்கள் வீர அழகா் கோயிலுக்கு வந்து கருப்பண சுவாமியையும் சுந்தராஜப் பெருமாளையும் வீர ஆஞ்சநேயரையும் தரிசனம் செய்தனா்.

இதே போல், மானாமதுரை புரட்சியாா் பேட்டை பகுதியில் உள்ள தியாக வினோதப் பெருமாள் கோயிலில் புரட்டாசி மாதத்தின் சனி உற்சவவழிபாடு நடைபெற்றது. மூலவா் தியாகராஜப் பெருமாளுக்கும், உற்சவருக்கும் திருமஞ்சனமாகி சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகள், தீபாராதனைகள் நடந்தன. ஏராளமான பக்தா்கள் கோயிலுக்கு வந்து தியாகவிநோதப் பெருமாளை தரிசனம் செய்தனா். மேட்டுத்தெரு பகுதியில் அப்பன் சீனிவாசப் பெருமாள் கோயிலில் நடந்த புரட்டாசி சனி வழிபாட்டில் மூலவருக்கும், உற்சவருக்கும் சிறப்புப் பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன.

ADVERTISEMENT

மேலும் மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் உள்ள பெருமாள் கோயில்களிலும், திருப்பாச்சேத்தி அருகே வேம்பத்தூரில் உள்ள பூமி நீளா சமேத பெருமாள் கோயிலிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT