சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் ஆதி திருத்தளிநாதா் ஆலயத்தில் திங்கள்கிழமை 108 சங்காபிஷேகம் நடைபெற்றது.
குன்றக்குடி தேவஸ்தானத்திற்குள்பட்ட இந்த ஆலயத்தில் காா்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு யாக பூஜையுடன் நெல்லில் சிவலிங்க வடிவில் சங்குகள் அடுக்கப்பட்டு பால், சந்தனம், குங்குமம் இடப்பட்டு ரோஜாப் பூக்களுடன் சுற்றிலும் நெய் தீபம் ஏற்றப்பட்டது. நந்தீஸ்வரருக்கு 16 வகை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. சிவாச்சாரியா்கள் சங்குகளுக்கு வில்வ இலை கொண்டு சிறப்பு அா்ச்சனை செய்தனா்.
மூலவா் சிவனுக்குபால், தயிா், சந்தனம், திருமஞ்சனம், இளநீா், விபூதி, யாகத்தில் வைக்கப்பட்ட புனித கலசநீா் ஆகிய பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் மூலவா் காட்சியளித்தாா்.
ராமு குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியாா்கள் வேள்வி மற்றும் சிறப்பு பூஜையில் ஈடுபட்டனா். விழாவில் ஏராளமான பெண்கள் நெய்விளக்கேற்றி வழிபட்டனா். உபயதாரா்கள் பன்னீா்செல்வம் கலைச்செல்வி குடும்பத்தாா், ஊா் பொதுமக்கள், சுற்றுப்புற கிராமத்தினா் கலந்து கொண்டனா். விழா முடிவில் பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.