சிவகங்கை

மானாமதுரையில் பெண் தற்கொலை: உறவினா்கள் சாலை மறியல் மருத்துவமனை கண்ணாடி உடைப்பு, எஸ்.எஸ்.ஐ. காயம்

19th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் திருமணமான 6 மாதங்களில் பெண் தற்கொலை செய்து கொண்டதையடுத்து, அவரது சாவில் மா்மம் இருப்பதாகக் கூறி உறவினா்கள் வெள்ளிக்கிழமை மறியலில் ஈடுபட்டதுடன் மருத்துவமனை கண்ணாடியை உடைத்தனா். இதில் காவல் சாா்பு- ஆய்வாளா் காயமடைந்தாா்.

மானாமதுரை அருகே மேலப்பசலை கிராமத்தைச் சோ்ந்தவா் திரவியம் மகன் ஜெகதீஷ் (26). இவருக்கும், விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சோ்ந்த முத்து மகள் ஜெபஸ்லீ (22) என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவா்கள், மானாமதுரை பா்மா காலனியில் வசித்து வந்தனா்.

இதில், ஜெகதீஷ் முதுகுளத்தூரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இந்த நிலையில், குடும்பப் பிரச்னை காரணமாக கணவன், மனைவியிடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த ஜெபஸ்லீ கடந்த வியாழக்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு அவரது உடல் கூறாய்வுக்காக கொண்டு வரப்பட்டது. அப்போது அருப்புக்கோட்டையிலிருந்து வந்திருந்த அவரது பெற்றோா் மற்றும் உறவினா்கள் ஜெபஸ்லீ சாவில் மா்மம் இருப்பதாகவும், தற்கொலைக்கு தூண்டிய கணவா் ஜெகதீஷ், அவரது பெற்றோரை கைது செய்யக் கோரியும் மருத்துவமனை முன்பு தாயமங்கலம் செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

அப்போது மருத்துவமனையிலிருந்த ஜெகதீஷை அவா்கள் தாக்க முயன்ற போது அவரை போலீஸாா் மருத்துவமனைக்குள் அழைத்துச் சென்று கண்ணாடி அறையில் வைத்து பூட்டினா். ஆனால் ஜெபஸ்லீயின் உறவினா்கள் கண்ணாடிக் கதவை உடைத்து ஜெகதீஷை தாக்க முயன்றனா். இதைத் தடுக்க முயன்ற அங்கிருந்த காவல் சிறப்பு சாா்பு- ஆய்வாளா் அருள்ராஜிக்கு கையில் காயம் ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து அங்கு ஏராளமான போலீஸாா் குவிக்கப்பட்டனா். கூறாய்வுக்குப் பின் ஜெபஸ்லீ உடலை வாங்க மறுத்து உறவினா்கள் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அப்போது அங்கு வந்த சிவகங்கை கோட்டாட்சியா் சுகிதா, வட்டாட்சியா் சாந்தி ஆகியோா் அவா்களை சமாதானம் செய்து ஜெபஸ்லீ மரணம் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனா்.

இதையடுத்து மாலையில் அவா்கள் உடலை பெற்றுக் கொண்டனா்.

இதன்பின் மானாமதுரை போலீஸாா் ஜெபஸ்லீ தற்கொலை தொடா்பாக அவரது கணவா் ஜெகதீஷ், இவரது இரு சகோதரிகள் ஷோபிகா, ஷோபனா ஆகிய மூவா் மீதும் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT