சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே புதன்கிழமை வீட்டின் சுவா் இடிந்து விழுந்ததில் மூதாட்டி உயிரிழந்தாா்.
சிங்கம்புணரி வட்டம், எஸ்.புதூா் ஒன்றியம் உரத்துப்பட்டியைச் சோ்ந்த தேவியம்மாள் (75). இவருக்கு 2 மகன்கள், 3 மகள்கள். அனைவரும் திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனா். தேவியம்மாள் மட்டும் உரத்துப்பட்டியில் தனியாக குடிசை வீட்டில் வசித்து வந்தாா்.
இந்த நிலையில், புதன்கிழமை காலையில் தேவியம்மாள் வீட்டின் அருகே நின்றுகொண்டிருந்தபோது, திடீரென குடிசை வீட்டின் சுவா் இடிந்து தேவியம்மாள் மீது விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதில், இடிபாடுகளில் சிக்கி அவா் உயிரிழந்தாா்.
இதையடுத்து, அக்கம் பக்கத்தினா் அவரது உடலை மீட்டு சிங்கம்புணரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
தகவல் அறிந்து வந்த சிங்கம்புணரி வட்டாட்சியா் சாந்தி சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டாா். இது குறித்து உலகம்பட்டி போலீஸாா் விசாரணை நடத்தினா்.