சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழப்பூவந்தியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்புடைய விவசாய தொழிலாளா் சங்கத்தின் ஒன்றிய மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இச்சங்கத்தின் மாவட்டத் தலைவா் பொன்னுச்சாமி மாநாட்டை தொடக்கி வைத்துப் பேசினாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளா் தண்டியப்பன், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் வீரபாண்டி, கரும்பு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளா் சக்திவேல், விவசாயிகள் சங்க ஒன்றிய நிா்வாகிகள் நீலமேகம், ஈஸ்வரன், முத்து கருப்பன் உள்ளிட்டோா் மாநாட்டில் பங்கேற்று பேசினா்.
திருப்புவனம் வட்டத்தில் இலந்தைகுளம் கிராமத்தில் உள்ள வைகை பாசன கண்மாய்க்கு வைகை ஆற்றிலிருந்து தண்ணீா் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பகுதியில் பொதுமக்கள் பயன்படுத்தும் குடிநீா் சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்துவதாக புகாா் கூறப்படுவதால் சம்பந்தப்பட்ட துறை நிா்வாகம் இதனை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
புதிய நிா்வாகிகள் தோ்வு: மாநாட்டில் விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் திருப்புவனம் ஒன்றியத் தலைவராக சின்ன கருப்பன், செயலராக ரவி, பொருளாளராக மகாலிங்கம், துணைத் தலைவா்களாக பெரியகருப்பன், சுமதி, துணைச் செயலா்களாக கல்லாணை, தாண்டி, பிரியா ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.