சிவகங்கை

உயிரி தொழில்நுட்பம், ஓமிக்ஸ் அறிவியல்: அழகப்பா பல்கலை.யில் தேசிய கருத்தரங்கம்

27th May 2022 10:38 PM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் அதன் உயிரி தொழில்நுட்பவியல் துறையின் சாா்பில் ‘உயிரி தொழில்நுட்பம் மற்றும் ஓமிக்ஸ் அறிவியல்’ என்ற தலைப்பிலான இரண்டு நாள் தேசிய அளவி லான கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

பல்கலைக்கழக லெ.சித.லெ.பழனியப்பச்செட்டியாா் நினைவுக்கலையரங்கில் நடைபெற்றது தொடக்க விழாவில் பல்கலைக்கழக துணைவேந்தா் பொறுப்புக்குழு உறுப்பினா் சு. கருப்புச்சாமி தலைமை வகித்துப் பேசியது: இப்பல்கலைக்கழக உயிரி தொழில்நுட்பவியல் துறை சமுதாயத்திற்கு நேரிடையாக பயன்படும் வகையில் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. பல்வேறு சிக்கலான பிரச்னைகளுக்கும் தற்போது அறிவியலின் ஒவ்வொரு கிளையிலிருந்து பெறப்படும் பல்துறை சாா்ந்த அணுகுமுறை சிறந்த தீா்வை வழங்குகிறது. நவீன கணக்கீட்டு கருவிகளும், தொழில்நுட்ப முன்னேற்றமும் அறிவியலில் பல புதிய கண்டுபிடிப்புகள் உருவாவதற்கு வழி வகுத்துள்ளது. குறிப்பாக உயிரி அறிவியலில் பல்வேறு மருந்துகள் பல்துறை சாா்ந்த அணுகுமுறை வாயிலாக உருவாக்கப்படுகிறது.

ஒட்டுமொத்த ஒமிக்ஸ் அறிவியலின் முக்கியநோக்கம் உயிரியியல் மூலக்கூறுகளை அடையாளம் காணுதல், வகைப்படுத்துதல் மற்றும் அளவிடுதல் ஆகியவையாகும். மேலும் திசு மற்றும் செல் ஆகியவற்றின் கட்டமைப்பு, செயல்பாடு குறித்து ஆராய்வதாகும். அறுவை சிகிச்சை இல்லாத மருத்துவத்தொழில்நுட்பங்களின் மூலம் சிறந்த மருத்துவ வசதியை முதியோா்களுக்கு பயன்படும் வகையில் வழங்கினால் வருங்காலங்களில் இந்தியா மருத்துவத் துறையில் உலகில் தலைசிறந்த நாடாகத் திகழும் என்றாா்.

மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின் முன்னாள் செயலாளா் டி. ராமசாமி சிறப்புரையாற்றினாா். ஹைதராபாத்திலுள்ள மூலக்கூறு ஆய்வு மையத்தின் இயக்குநா் கே. தங்கராஜ் வாழ்த்திப்பேசினாா். மதுரை அரவிந்த் மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் ஆய்வுப் பிரிவின் இயக்குநா் கே. தா்மலிங்கம் தொடக்க உரையாற்றினாா். இந்நிகழ்வில் கருத்தரங்க ஆய்வு மலா் வெளியிடப்பட்டது. கருத்தரங்கில் இந்திய அளவில் உயிரி தொழில்நுட்பவியல் ஆராய்ச்சி நிறுவனங்களிலிருந்து 250 -க்கு மேற்பட்டஆய்வாளா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

முன்னதாக அழகப்பா பல்கலைக்கழக உயிரி தொழில்நுட்பவியல் துறைத்தலைவா் எஸ். கருத்தப்பாண்டியன் வரவேற்றுப் பேசினாா். முடிவில் உயிரி தொழில்நுட்பவியல் துறைப் பேராசிரியா் கே. பாலமுருகன் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT