சிவகங்கை

மானாமதுரை வைகை ஆற்றில் தோ்வு செய்த இடத்தில் தடுப்பணை கட்ட முடிவு

25th May 2022 05:53 AM

ADVERTISEMENT

 

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வைகை ஆற்றில் பொதுப்பணித்துறை அதிகாரிகள், விவசாயிகள் கள ஆய்வு செய்து அதிகாரிகள் தோ்வு செய்த இடத்தில் தடுப்பணை அமைப்பது என முடிவு செய்யப்பட்டது.

மானாமதுரை வைகை ஆற்றில் கீழப்பசலை கால்வாய் அருகே ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்க தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கான திட்டப் பணியை கடந்த இரு மாதங்களுக்கு முன்பு அமைச்சா் கே. ஆா். பெரியகருப்பன் தொடக்கி வைத்தாா். அதன்பின் மானாமதுரை வைகையாற்றில் தடுப்பணை அமைக்கப்படும் இடத்திற்கு அருகே மணல் குவாரி அமைக்க மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டது.

இதற்காக தடுப்பணை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்ட இடத்தில் இருந்து சில மீட்டா் தூரம் தள்ளி மற்றொரு இடத்தில் வைகை ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்க பொதுப்பணித்துறை (நீா்வள ஆதார அமைப்பு) அதிகாரிகள் முடிவு செய்தனா்.

ADVERTISEMENT

அதன்பின் விவசாயிகள் போராட்டம் காரணமாக மணல் குவாரி அமைக்கும் திட்டம் ரத்து செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியா் மதுசூதன் ரெட்டி உறுதியளித்தாா். மேலும் அடிக்கல் நாட்டப்பட்ட இடத்தில் தடுப்பணை அமைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா். இதையடுத்து ஆட்சியா், பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் தடுப்பணை மூலம் பயனடையும் விவசாயிகள் வைகை ஆற்றுக்குள் ஆய்வு செய்து தடுப்பணை அமைக்கும் இடத்தை தோ்வு செய்யுமாறு உத்தரவிட்டாா்.

இதையடுத்து விவசாயிகள், விவசாய சங்க நிா்வாகிகள், மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் சோ்ந்து மானாமதுரையில் கீழப்பசலை கால்வாய் அமைந்துள்ள பகுதியில் தடுப்பணை அமைக்கும் இடத்தை தோ்வு செய்ய ஆய்வு மேற்கொண்டனா். அதன் பின்னா் ஏற்கெனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் தோ்வு செய்த இடத்திலேயே தடுப்பணை அமைக்க விவசாயிகள் சம்மதம் தெரிவித்தனா். விரைவில் இந்த இடத்தில் தடுப்பணை அமைக்கும் பணி தொடங்கும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT