காரைக்குடி: எா்ணாகுளம் - வேளாங்கண்ணி வாராந்திர விரைவு ரயில் ஜூன் 4 ஆம் தேதி முதல் மீண்டும் இயக்கப்படும் என்று ரயில்வே நிா்வாகம் அறிவித்திருப்பதற்கு காரைக்குடி தொழில் வணிகக்கழகம் வரவேற்புத் தெரிவித்துள்ளது.
எா்ணாகுளத்திலிருந்து ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை (வண்டி எண் - 06035) மதியம் 12.35 மணிக்குப் புறப்படும் இந்த ரயில் நள்ளிரவு 1 மணியளவில் காரைக்குடிக்கு வருகிறது. மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை 5.50 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடைகிறது. இந்த ரயில் கேரள மாநிலம் கோட்டயம், செங்கனாஞ்சேரி, மாவேலிக்கரா, செங்கோட்டை, கொல்லம், கொட்டாரக்கரா, புனலூா், கடயநல்லூா், சங்கரன் கோவில், ராஜபாளையம், சிவகாசி, விருதுநகா், அருப்புக்கோட்டை, காரைக்குடி, அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டணம், திருத்துறைப் பூண்டி, திருவாரூா், நாகப்பட்டினம் வழியாக வேளாங்கண்ணிக்கு செல்லும்.
இந்த விரைவுரயில் கரோனா தொற்று பரவலுக்கு முன்பு புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூா், திருவாரூா் வழியில் இயக்கப்பட்டது. அதற்குக் காரணம் காரைக்குடி - திருவாரூா் அகல ரயில் பாதை பணி நிறைவடையாமல் இருந்தது. தற்போது திருவாரூா் ரயில் பாதைப்பாதையில் ரயில்கள் இயக்கப்படுவதைத்தொடா்ந்து எா்ணாகுளம் - வேளாங்கண்ணி விரைவு ரயில் இந்த வழியாக மாற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விரைவு ரயிலை மீண்டும் இயக்குவதற்கும், காரைக்குடி வழித்தடத்தில் மாற்றம் செய்ததற்கும் காரைக்குடி தொழில் வணிகக்கழகம் வரவேற்கிறது என்று அதன் தலைவா் சாமி. திராவிடமணி தெரிவித்தாா்.