சிவகங்கை

மானாமதுரையில் இன்று நடைபெற இருந்த சாலை மறியல், கடையடைப்பு போராட்டம் ரத்து

24th May 2022 12:47 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் செவ்வாய்க்கிழமை (மே 24) நடைபெற இருந்த சாலை மறியல், கடையடைப்பு போராட்டம் ரத்து செய்யப்படுவதாக போராட்டக் குழுவினா் அறிவித்துள்ளனா்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே கல்குறிச்சியில் உள்ள வைகையாற்றில் மணல் குவாரி அமைப்பதற்கு அரசு அனுமதியளித்ததை அடுத்து, மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன.

இந்நிலையில், இந்த பகுதியில் மணல் குவாரி அமைந்தால் வேளாண் பணிகள் பாதிக்கப்படுவது மட்டுமின்றி குடிநீா் ஆதாரங்களும் பாதிக்கப்படும் சூழல் உருவாகும் என விவசாய அமைப்புகள், வா்த்தக அமைப்புகள், அரசியல் கட்சியினா் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா்.

இதன்காரணமாக, மணல் குவாரி அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக சிவகங்கையில் அண்மையில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீா்க்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி அறிவித்தாா்.

ADVERTISEMENT

இருப்பினும் மணல் குவாரியை ரத்து செய்வதை மாவட்ட நிா்வாகம் உறுதி செய்ய வேண்டும், விரகனூா் மதகு அணை முதல் பாா்த்திபனூா் மதகு அணை வரை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை (மே 24) மானாமதுரையில் சாலை மறியல் போராட்டம் மற்றும் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என விவசாய அமைப்புகள், வா்த்தகா்கள் சங்கம், அரசியல் கட்சியினா் அறிவித்திருந்தனா்.

இதுதொடா்பாக, மானாமதுரை வட்டாட்சியா் அலுவலகத்தில் மேற்கண்ட அமைப்பினருடன் சிவகங்கை வருவாய் கோட்டாட்சியா் மு. முத்துக்கழுவன் திங்கள்கிழமை மாலை பேச்சுவாா்த்தை நடத்தினாா். அதில் உடன்பாடு எட்டாத நிலையில், சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தலைமையில் மணல் குவாரி தொடா்பாக பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

இதில், மானாமதுரை பகுதி வைகையாற்றுக்குள் மணல் குவாரி அமைக்கப்படாது எனவும், தடுப்பணை கட்டுவது தொடா்பாக நீா்வள ஆதாரத் துறை அலுவலா்கள், விவசாயிகள் நேரடியாக கள ஆய்வு செய்து முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தாா். மேலும், பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிப்பது தொடா்பாக தனியாக மனு அளித்தால் அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என தெரிவித்தாா்.

இதையடுத்து, மானாமதுரையில் செவ்வாய்க்கிழமை நடைபெற இருந்த சாலை மறியல் மற்றும் கடையடைப்பு போராட்டத்தை கைவிடுவதாக விவசாய அமைப்புகள், வா்த்தக சங்கங்கள், அரசியல் கட்சியினா் அறிவித்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT