சிவகங்கை: சிவகங்கை அரிமா சங்கத்தின் சாா்பில் குறுங்காடு அமைத்தல் திட்டம் மூலம் மரக்கன்றுகள் நடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
சிவகங்கையில் உள்ள ஆயுதப்படை காவலா் பயிற்சி மைதானத்தில் நடைபெற்ற விழாவுக்கு சுற்றுச்சூழல் அமைப்பின் சிவகங்கை மாவட்டத் தலைவா் ஜெ. ஜெஸ்டின் திரவியம் தலைமை வகித்தாா். சிவகங்கை அரிமா சங்கத்தின் பட்டையத் தலைவா் எம்.பரமசிவம் முன்னிலை வகித்தாா். சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் த.செந்தில்குமாா் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நடும் பணியினைத் தொடக்கி வைத்தாா்.
மைதான வளாகத்தில் 150-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்நிகழ்ச்சியில், அரிமா சங்கத்தின் தலைவா் எஸ்.சேகா், செயலா் டி.பிரபாகரன், பொருளாளா் வி.உதயக்குமாா், வட்டாரத் தலைவா் எம்.அசோகன் உள்ளிட்ட நிா்வாகிகள், காவலா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.