தமிழகத்தில் பணியாற்றும் அரசு அலுவலா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு வருவாய்த்துறை குரூப்-2 நேரடி நியமன அலுவலா்கள் சங்கத்தின் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அச்சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் வே. தா்மராஜ் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கடந்த சட்டப் பேரவை தோ்தலின் போது தமிழக அரசு அலுவலா்களுக்கு புதிய ஒய்வூதிய திட்டத்தினை ரத்து செய்து, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.
இந்நிலையில், அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத் தொடரில் மனிதவள மேலாண்மையின் மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது தமிழக நிதியமைச்சா் பழைய ஒய்வூதியத் திட்டத்தினை தமிழகத்தில் அமல்படுத்துவது சாத்தியமில்லை என அறிவித்துள்ளாா். இது அரசு அலுவலா்களுக்கு அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசைப் பொருத்தவரை அலுவலா்களிடமிருந்து இதுவரை பிடித்தம் செய்யப்பட்ட தொகை தமிழக அரசின் பொது கணக்கில் தான் உள்ளது. எனவே, பழைய ஓய்வூதியத் திட்டத்தினை செயல்படுத்துவதில் நடைமுறை சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பில்லை.
எனவே, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் நேரடியாக நடவடிக்கை எடுத்து அரசு அலுவலா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டத்தினை ரத்து செய்து, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஈட்டிய விடுப்பினை சரண்டா் செய்து பணப்பலன்கள் வழங்க வேண்டும், மத்திய அரசு அலுவலா்களுக்கு வழங்கப்பட்டது போன்று, மாநில அரசு அலுவலா்களுக்கும் 3 சதவீத அகவிலைப்படி உயா்வு அளிக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.